சென்னை: நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ், தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். அந்த வகையில், அவரின் அறக்கட்டளை மூலம் படித்த மாணவர்களுடன் இணைந்து 'மாற்றம்' என்ற சேவை அமைப்பை ராகவா லாரன்ஸ் தொடங்கியுள்ளார். இதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார்.
மேலும், அறந்தாங்கி நிஷா ஆகியோரும் இணைந்து மாற்றம் அமைப்பில் விவசாயம், கல்வி, மருத்துவத்துக்கு பல்வேறு உதவிகளைச் செய்ய உள்ளனர். இதன் தொடக்க விழா இன்று (மே.1) சென்னையில் நடைபெற்றது. இதில் ராகவா லாரன்ஸ், அவரது அம்மா, எஸ்.ஜே.சூர்யா, அறந்தாங்கி நிஷா, செஃப் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கப்பட்டது.
பின்னர், நடிகர் ராகவா லாரன்ஸ் ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் என்னிடம் உதவிபெற்று தற்போது உதவும் நிலையில் உள்ள குழந்தைகள் அனைவரும் இணைந்து உதவிகள் செய்ய நினைத்தனர். அதற்காக இந்த மாற்றம் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இதில், விவசாயிகளுக்கு உதவி செய்கிறோம். நான் ஏற்கனவே மருத்துவத்தில் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்து வருகிறேன். விவசாயம், கல்வி, மாற்றுத்திறனாளி, விளையாட்டு, மருத்துவம், ஆகியவற்றிற்கு நான் ஏற்கனவே உதவி செய்து வருகிறேன்.