சென்னை: ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், நடிகர் பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியான 'அந்தகன்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதற்காக நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் தியாகராஜன், இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார், பிரசாந்த், சிம்ரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய நடிகர் பிரசாந்த் அந்தகன் வெற்றி குறித்து பேசுகையில், ''அந்தகன் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். படம் வெளியான தருணத்திலிருந்து இப்படத்தைப் பற்றிய விமர்சனம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் வெற்றிக்கு படத்தில் நடித்த கார்த்திக் போன்ற அனுபவமிக்க நட்சத்திரங்களும், மிக முக்கியமான காரணம். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய உற்சாகம் ஒட்டுமொத்த குழுவினருக்கும் உத்வேகத்தை அளித்தது" என்றார்
இப்படத்தில் அனுபவம் வாய்ந்த நடிகர்களுடன் நடித்தது குறித்து பேசுகையில், “சமுத்திரக்கனி, கே. எஸ். ரவிக்குமார், ஊர்வசி, யோகி பாபு போன்ற நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடித்த அனுபவமும் மறக்க முடியாதது. குறிப்பாக நான் இன்றும் மதிக்கும் இயக்குநரான கே. எஸ். ரவிக்குமார், ஊர்வசி, யோகி பாபு ஆகியோருடன் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய போது, ஒவ்வொரு நாளும் படமாக்கப்படும் காட்சியை முழுதாக புரிந்து கொண்டு அக்காட்சியை எவ்வாறு மேம்படுத்தலாம் என திட்டமிட்டு, அதற்கு ஒத்திகை பார்த்து நடித்தோம்.
60களில் நடிகர்கள் எப்படி நடித்தார்கள், 70களில் எப்படி நடித்தார்கள், 80களில் நடிகர்கள் எப்படி நடித்தார்கள் என்பதனை உடன் பணியாற்றிய கலைஞர்களுடன் பேசி விஷயங்களை கேட்டு நடித்தோம். இதுபோன்ற அனுபவம் எனக்கு மீண்டும் 'அந்தகன்' படத்தில் கிடைத்தது” என கூறினார்.