திருநெல்வேலி: தமிழ் சினிமா நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் ரசிகர்கள் சார்பில் பட்டப்பெயர்கள் சூட்டப்படுவது வழக்கம். 1990களில் உச்சத்தில் இருந்த நடிகர்களில் ஒருவரான கார்த்திக்கை அவருடைய ரசிகர்கள் 'நவரச நாயகன்' என அழைத்து வந்தனர். பெயருக்கு ஏற்றார்போல் கார்த்திக் தனது நடிப்பில் நவரசங்களையும் வெளிப்படுத்துவார். குறிப்பாகக் கதாநாயகனாக இருந்தும் முழுக்க முழுக்க நகைச்சுவை தன்மையோடு மிக எதார்த்தமாக நடிக்கக்கூடிய திறமை இவரிடம் உண்டு.
இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் 1992ஆம் ஆண்டு வெளியான அமரன் திரைப்படம் நடிகர் கார்த்திக்கின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. கே ராஜேஸ்வர் இயக்கத்தில் வெளியான அமரன் திரைப்படத்தில் கதாநாயகனாக கார்த்திக், கதாநாயகியாக பானுபிரியா ஆகியோர் நடித்திருந்தனர்.
குறிப்பாக அமரன் என்ற வார்த்தை தென் மாவட்டங்களில் வசிக்கும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெயராகக் கருதப்பட்டது. மேலும் அச்சமூகத்தை மையப்படுத்தியே இப்படம் அமைந்ததாகவும், அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. நடிகர் கார்த்திக் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதே சர்ச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
குறிப்பாக இப்படத்தில் வரும் 'வெத்தலை போட்ட சோக்குல' என்ற பாடல் அப்போது பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. இந்நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் வரும் அவரது 21வது படத்திற்கு அமரன் எனப் பெயரிட்டிருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு அமரன் எனப் பெயர் வைத்துள்ளனர். சிவகார்த்திகேயன் ராணுவ வீரர் வேடத்தில் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.