சென்னை:தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம் . இவரது இயக்கத்தில் கடைசியாக ரெண்டு பாகங்களாக வெளியான பொன்னியின் செல்வன் படம் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றதுடன் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசனை வைத்து இயக்கிவரும் புதிய படம் 'தக் லைஃப்' (Thug Life). இது கமல்ஹாசனின் 234வது படமாகும். இப்படத்தின் மூலம் சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்தினத்துடன் ஜோடி சேர்ந்துள்ளார் கமல்ஹாசன்.
இதில் சிம்பு, த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன.
ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படத்தில் படப்பிடிப்புகள் கடந்த ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்தது. தற்போதுவரை 60 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.