சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு 'பராசக்தி' என பெயர் வைக்கப்ப்டுள்ளதாக டீசர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நேற்று(ஜன.28) மாலையே 'பராசக்தி' படத்தின் அறிவிப்பு டீசர் வெளியாகும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த வேளையில் இன்று மாலை தான் டீசர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தனர்.
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அவரது இசையில் இது 100வது படமாகும். மதன் கார்க்கி, ஷான் கருப்பசாமி கூடுதல் வசனங்களை எழுதுகின்றனர். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். மிகுந்த பொருட்செலவில் வரலாற்று திரைப்படமாக உருவாகி வரும் இந்த திரைப்படமானது நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமாகும்.
அதனால் படத்தின் முதல் அறிவிப்பில் இருந்தே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவும் தணிக்கை செய்யப்பட்டு, அதன் சான்றிதழும் இணையத்தில் வைரலாகி வந்தது. அந்த சான்றிதழிலும் பராசக்தி என்ற பெயர் இடம்பெற்றிருந்ததால் அந்த பெயரே படத்தின் தலைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இன்று வெளியாகியிருக்கும் அறிவிப்பு டீசரின் மூலம் அதிகாரப்பூர்வமாக படத்தின் தலைப்பு பராசக்தி என உறுதி செய்யப்பட்டுள்ளது. 1960, 70கள் காலகட்டத்தை பிரதிபலிப்பதாக பராசக்தி அறிவிப்பு டீசர் அமைந்துள்ளது. அப்போதைய காலகட்டத்தின் மெட்ராஸில் அமைந்துள்ள பச்சையப்பன் கல்லூரியில் நடைபெறும் போராட்டங்களாக டீசர் விரிகிறது.
நடிகர் ரவி மோகன் ஆக்ரோஷமான காவல் துறை அதிகாரியாக தோன்றுகிறார். ஸ்ரீலிலா தெலுங்கு பேசக்கூடிய பெண்ணாக டீசரில் வருகிறார். இறுதியாக மாபெரும் மாணவர் திரளை பார்த்து பேசக்கூடியவராக சிவகார்த்திகேயன் காட்டப்படுகிறார். பெரும் சேனை ஒன்று தேவை என அவர் முழக்கமிடுவதுடன் பராசக்தி என தலைப்பு காட்டப்படுகிறது. 1960ஆம் ஆண்டு வெளிவந்த எம்.ஜி.ஆர் நடித்த மன்னாதி மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள புகழ்மிக்க பாடலான அச்சம் என்பது மடமையடா பாடல் இந்த அறிவிப்பு டீசரின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
1960 இல் நடைபெற்ற மிக முக்கியமான போராட்டமான ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை கதைக்களமாக கொண்டு இத்திரைப்படம் உருவாகலாம் என கூறப்படுகிறது. பழம்பெரும் நடிகரான சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'பராசக்தி'. தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று. இந்நிலையில் இந்த படத்திற்கு பராசக்தி என பெயர் வைக்கக்கூடாது என சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் சில நாட்களுக்கு முன் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
Presenting you the First Look Poster of #Parasakthi
— DawnPictures (@DawnPicturesOff) January 29, 2025
Tamil Teaser Link 🔗 https://t.co/DM8za1QWDI@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14 @dop007 @editorsuriya @arvaround #BindiyaChhabria… pic.twitter.com/5XwHGbwtwy
அந்த கண்ட அறிக்கையில், “பராசக்தி, இது வெறும் திரைப்படப் பெயர் மட்டுமல்ல. தமிழ்த் திரையுலக வரலாற்றை 1952க்கு முன் - 1952க்குப் பின் என்று பிரித்துப் பார்க்கலாம். பாடல்களே படங்களாக, பாடத் தெரிந்தவர்களே நடிகர்களாக இருந்ததை மாற்றி, அனல் தெறிக்கும் வசனங்கள், உணர்ச்சியைத் தூண்டும் நடிப்பு, இவற்றோடு சமுதாய புரட்சியையும் ஏற்படுத்திய "பராசக்தி" திரைப்படத்தின் பெயரை மீண்டும் ஒரு திரைப்படத்திற்கு வைப்பது என்பதை ஏற்றுக் கொள்ளவே இயலாது” என குறிப்பிட்டிருந்தனர்.
இதையும் படிங்க: அரசியல் களத்தில் குதித்த நடிகர் ரவி மோகன்... ஆர்.கே நகர் எம்.எல்.ஏ ஆகிறார்
முன்னதாக இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, துல்கர் சல்மான், நஸ்ரியா ஆகியோர் இந்த படத்தில் நடிப்பதாக இருந்தது. அப்போதைய தலைப்பு புறநானூறு. பின்னர் அப்படம் கைவிடப்பட்ட நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு தற்போது தலைப்பு மாற்றபட்டுள்ளது.