சென்னை: நடிகர் ரவி மோகன் நடித்து வரும் அவரது 34வது படத்திற்கு ’கராத்தே பாபு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கி வரும் இப்படத்தின் தலைப்பை அறிவிப்பதற்காகவே ஒரு டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த டீசர் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
‘பிரதர்’, ‘காதலிக்க நேரமில்லை’ படங்களைத் தொடர்ந்து ரவி மோகன் நடிக்கும் இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிக்கிறார். தௌஃபி எஸ் ஜிவால், சக்தி வாசுதேவன், கே.எஸ். ரவிக்குமார், நாசர், விடிவி கணேஷ், சுப்ரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்திலிருந்து ஹாரிஸ் ஜெயராஜ் விலகிய நிலையில் சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ’மேயாத மான்’ பட இயக்குநர் ரத்னகுமார் மற்றும் எழுத்தாளர் பாக்கியம் குமார் ஆகியோர் இந்த படத்தின் கதை, திரைக்கதையில் பணியாற்றுகின்றனர். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார்
படத்தின் தலைப்பை அறிவிக்கும் டீசரில் சட்டமன்றத்தில் நடக்கும் காட்சி இடம் பெற்றிருக்கிறது. ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பழைய பெயரை வைத்து அரசியல் விவாதம் நடக்கிறது. அதில் எதிர்க்கட்சி தலைவரான கே.எஸ்.ரவிக்குமார் முதலமைச்சரைப் பார்த்து, ”எதற்காக அவர் எனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் பழைய பெயரைத் தெரிந்து கொள்ள இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார், பெயரில் என்ன இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்ப அதற்கு முதலமைச்சரான நாசர், பெயர்கள் எத்தனை முக்கியம் என பெரிய விளக்கம் ஒன்றை கொடுக்கிறார்.
பின்பு விவாதத்தின் மையமான ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினரான ரவி மோகன், ”முதலமைச்சர் என்னுடைய பழைய பெயரை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில் மிக்க மகிழ்ச்சியே” என கூறி, “உங்கள் அனைவருக்கும் என்னை சண்முக பாபுவாகத் தான் தெரியும். ஆனால் எனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது.
17 வருடங்களுக்கு முன் ஆர்.கே.நகர் மக்களால் எனக்கு கொடுக்கப்பட்ட பெயர் அது. அந்த பெயர் தான் இன்று உங்கள் முன் என்னை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. அந்த பெயர்” எனக் கூறி முடிக்க ’கராத்தே பாபு’ என படத்தின் தலைப்பு வருகிறது. நடிகர் ரவி மோகன் கதாபாத்திரமான கராத்தே பாபு எப்படி சண்முக பாபுவாக மாறினார் என்பதை விரிவாக பேசுவதே இந்த படமாக இருக்கும் என தெரிகிறது.
இதையும் படிங்க: பராசக்தி தலைப்பை கைப்பற்றிய விஜய் ஆண்டனி... இதுவும் 25வது படமா?
மிக நீண்ட நாட்கள் கழித்து நேரடி அரசியல் களத்தில் வெளிவரும் திரைப்படமாகவும் நடிகர் ரவி மோகனுக்கு இதுதான் முதல் அரசியல் கதைக்களம் சார்ந்த திரைப்படமாகவும் ’கராத்தே பாபு’ இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. டீசரில் காட்டப்பட்ட சட்டமன்ற வடிவமைப்பும் அதில் அரசியல்வாதிகளை நடித்த நடிகர்களும் உண்மையான சட்டமன்றத்தை பிரதியெடுத்திருக்கிறார்கள் என பாரட்டப்படுகிறது.