சென்னை: ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' திரைப்படம் தீபாவளியை ஒட்டி அக்டோபர் 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன், பூமிகா, விடிவி கணேஷ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ஜெயம் ரவி பேசுகையில், ''பிரதர் திரைப்படம் ஒரு தீபாவளி பண்டிகையை கொண்டாட ஒரு படத்தில் என்னென்ன வேண்டுமோ அவை எல்லாம் ஒன்றாக சேர்ந்திருக்கும் படம் தான் 'பிரதர்'. இந்தப் படத்தை உருவாக்கும் போதும் நாங்கள் அனைவரும் சந்தோஷமாகவே பணியாற்றினோம். இந்தப் படத்தில் படப்பிடிப்பு நடைபெறும் தருணங்களில் நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இருந்தோம்.
தயாரிப்பாளர் சுந்தர் எங்கள் அனைவருக்கும் அனைத்து வசதிகளையும் அளித்தார். படப்பிடிப்பு நடைபெற்ற தருணத்தில் பூமிகாவின் பிறந்தநாள் வந்தது, அதற்காக படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினோம். படப்பிடிப்பு நடைபெற்ற நாட்கள் முழுவதும் அனைவரிடமும் அன்பும், அக்கறையும் இருந்தது. இந்தப் படத்தை நடித்த நடிகர்களையும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களையும் மறக்க முடியாது.
மேலும் சண்டை பயிற்சி இயக்குநர் ஸ்டன்னர் சாமை சிறுவயதில் இருந்தே தெரியும். 'பேராண்மை' படத்தில் மரத்தின் மீது ஓடும் காட்சி ஒன்று இருக்கும். அந்த காட்சியில் நான் நடிக்க தயங்கிய போது.. அவர் அவர் அந்த மரத்தின் மீது ஓடி காண்பித்து நம்பிக்கையை உண்டாக்கினார். இந்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.
ஃபேமிலி டிராமா ஜானர் திரைப்படங்களை எடிட் செய்வது கஷ்டமான விஷயம். என் அப்பா எடிட்டர் மோகன் நிறைய ஃபேமிலி டிராமா ஜானரிலான படங்களை எடிட் செய்துள்ளார். அப்போது நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அது எவ்வளவு கடினம் என எனக்குத் தெரியும். அதனால் இந்த மாதிரி படங்களை எடிட் செய்வதற்கு ஒரு திறமையான எடிட்டர் தேவை. அந்த திறறைகள் இப்படத்தை தொகுத்த ஆசிஷுக்கு இருக்கிறது. அவருக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு.
நட்டி ஒரு யூனிக்கான ஆக்டர். இவரை புரிந்து கொள்ளவே முடியாது, ஹீரோவா? வில்லனா? இல்ல காமெடி பண்ண போறாரா என புரிந்து கொள்ள முடியாது . ஆனால் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதில் ஒரு அவருடைய தனித்துவமான நடிப்பு திறமை இருக்கும். அவருடைய ஒளிப்பதிவுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவர் ஒரு சிறந்த நடிகர் என்பது அவருடன் இணைந்து பணியாற்றும் போது தான் தெரிந்தது.