சென்னை: விஷால் சிங்கம் போல மீண்டு வருவார் என நடிகர் ஜெயம் ரவி கூறியுள்ளார். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம், மணிவண்ணன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘மதகஜராஜா’. இப்படம் கடந்த 2012இல் உருவாக்கப்பட்ட நிலையில், 12 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சனைகளால் வெளியாகாமல் இருந்தது. பல வருடங்களுக்கு பிறகு ஒரு வழியாக மதகஜராஜா திரைப்படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் விஷாலை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். விஷால் மிகவும் பலவீனமாக இருந்தார். மேடையில் ஏறி பேசும் போது கூட கை நடுக்கத்துடன், வார்த்தைகள் உச்சரிப்பில் தடுமாற்றத்துடன் இருந்தார். உடனே சுதாரித்த தொகுப்பாளர் டிடி சோஃபாவை மேடையில் போட்டு அவரை அமர வைத்தார். மேலும் விஷாலுக்கு காய்ச்சல் காரணமாக பலவீனமாக இருப்பதாக டிடி கூறினார்.
இதனைத்தொடர்ந்து எப்போதும் கம்பீரமாக இருக்கும் விஷாலுக்கு ஏன் இந்த நிலைமை என ரசிகர்கள் கவலை அடைந்தனர். மேலும் சண்டைக்கோழி டைமில் இருந்த விஷாலை மீண்டும் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தனர். திரைத்துறையினரும் விஷால் விரைவில் உடல்நலம் பெற்று, தேறி வர வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.