சென்னை:அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில், ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சைரன். இத்திரைப்படம் பிப்ரவரி 16ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இதன் செய்தியாளர் சந்திப்பு சென்னை பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்றது.
இதில் நடிகர் ஜெயம் ரவி, சமுத்திரக்கனி, அழகம் பெருமாள், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ், எடிட்டர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். இதில் நடிகர் ஜெயம் ரவி மேடையில் பேசுகையில், "முதலில் இந்தப் படம் ஆரம்பித்தது படத்தொகுப்பாளர் ரூபனிடம் இருந்து தான்.
நிமிர்ந்து நில் திரைப்படத்தில் அருமையான பின்னணி இசையை ஜீவி பிரகாஷ் கொடுத்திருந்தார். இந்த படத்திலும் ஜி.வி.தான் இசையமைக்க வேண்டும் என நினைத்து இருந்தோம், அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தில் ஒரு உறுதியான கதாபாத்திரம் தேவைப்பட்டது அதற்கு கீர்த்தி சுரேஷ் சரியாகப் பொருந்தி இருந்தார்.
கீர்த்தி ஒரு கடுமையான உழைப்பாளி, அதுதான் அவரை இவ்வளவு பெரிய இடத்தில் வைத்து இருக்கிறது. அறிமுக இயக்குநர்களின் வளர்ச்சிக்கு நான் ஒரு கருவியாகத்தான் இருக்கிறேன். என்னைக் கூட்டிச் செல்வது அவர்கள் தான். இந்த படம் எனக்கு ஒரு புது அனுபவம், இதில் இரண்டு விதமான தோற்றத்தில் நடித்துள்ளேன்" என்றார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், "ஜெயம் ரவியின் திறமைக்கும் உழைப்புக்கும் அவருக்கான பெரிய இடம் காத்துக் கொண்டிருக்கிறது. அவருடன் நிமிர்ந்து நில் என்ற படத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். சைரன் திரைப்படம் ஒவ்வொரு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும் ஒரு சமர்ப்பணமாக இருக்கும்" என்றார்.
இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் மேடையில் பேசுகையில், "எடிட்டர் ரூபன் தான் என்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்தார். 70 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பை நடத்தி இருப்போம் ஒரு நாள் கூட எந்த கேள்வியும் கேட்கவில்லை, எடுத்த காட்சியைக் காட்டவோ, படம் எப்படி வந்து கொண்டு இருக்கிறது எனவோ கேட்டது இல்லை. அறிமுக இயக்குநரை அந்த அளவிற்கு நம்பியது தான் காரணம்" என்றார்.
இதையும் படிங்க:"பத்து பாடல் எழுதிவிட்டு செத்துப் போகலாம் என்று சினிமாவிற்கு வந்தேன்" - சினேகன் பேச்சு!