சென்னை: தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் இந்த ஆண்டு மோசமான தொடக்கத்தைக் கொடுத்துள்ளது. இதுவரை வெளியான படங்கள் அனைத்தும் குறிப்பிடத்தக்க வரவேற்பு மற்றும் வெற்றியைப் பெறவில்லை. மாறாக மலையாள சினிமாக்கள் இங்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நேரம் என்பதால் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை. கோடை விடுமுறையை அனைத்து படங்களும் குறிவைத்துள்ளன. கடந்த சில மாதங்களாகச் சிறிய முதலீட்டுப் படங்களே வெளியாகியுள்ளது. அப்படங்களுக்கு ரசிகர்களின் வரவேற்பு இல்லாததால் காட்சிகள் ரத்து செய்யப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் 6 தமிழ்த் திரைப்படங்கள் வெளியாக உள்ளன. ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த வாரம் ரெபல் திரைப்படம் வெளியான நிலையில், நேற்று இயக்குநர் பி.வி சங்கர் இயக்கத்தில் ‘கள்வன்’ திரைப்படம் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து நடிகை இவானா, இயக்குநர் பாரதிராஜா, விஜய் டிவி தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முண்டாசுப்பட்டி, ராட்சசன் உட்படப் பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பி.வி சங்கர் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
டபுள் டக்கர் -மீரா மகதி இயக்கத்தில், தீரஜ் நடிப்பில் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் ‘டபுள் டக்கர்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ஏர் ஃபிளிக் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில், தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர் உட்படப் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். பேன்டசி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள டபுள் டக்கர் இன்று திரையரங்கிற்கு வருகிறது.
ஒயிட் ரோஸ்(White Rose)- இயக்குநர் கே.ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி, ஆர்.கே.சுரேஷ் உட்படப் பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் ஒயிட் ரோஸ் இன்று திரையரங்கிற்கு வருகிறது. இப்படத்தினை ரஞ்சனி 'பூம்பாறை முருகன் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சுதர்ஷன் இசையமைத்துள்ளார்.