சென்னை: '96' திரைப்பட புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் குடும்ப உறவுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ‘மெய்யழகன்’ திரைப்படம் செப்.27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்திருந்தார்.
படம் வெளியாகியுள்ள நிலையில், கார்த்தி, அரவிந்த்சாமி ஆகியோர் நடிப்பு மூலம் கட்டி போடுவதாக ஒரு தரப்பினர் மத்தியில் வரவேற்பு பெற்றிருந்தாலும், படத்தின் திரைக்கதை பொறுமையாக நகர்வதாகவும், இரண்டாவது பாதியில் நடிகர் கார்த்தி பேசிக் கொண்டே இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
படத்தின் நீளம் ஏறக்குறைய 2 மணி நேரம் 57 நிமிடமாக இருந்த நிலையில், படத்தில் 18 நிமிடம் 42 நொடிகள் காட்சியை நீக்கி தற்பொழுது 2 மணி நேரம் 38 நிமிடமாக படக்குழு மாற்றியுள்ளது. தொடர்ந்து, நீக்கப்பட்ட காட்சிகள் கொண்ட புதிய வெர்ஷன் இன்று மாலையிலிருந்து திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் பிரேம்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாற்றங்களே வினா... மாற்றங்களே விடை"அன்புக்குரிய என் மக்களுக்கு அன்பால் உருவான மெய்யழகனுக்கு பேரன்பை அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி. திரைமொழியின் வழக்கமான பாணியில் இருந்து விலகிய ஒரு திரை அனுபவத்திற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையை விதைத்ததற்கு நன்றி. ஏராளமான அனுபவ பகிர்வுகள் இந்த படைப்பின் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கின்றன. மெய்யழகனை உணர்ந்து புரிந்துகொண்ட பெரும்பாலானோரின் அன்பும், ரசனையும் பிரமிக்க வைக்கின்றன.