சென்னை:முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க் ஆகியவற்றில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் 2025 தேர்வினை எழுதுவதற்கு ஜனவரி 24-ஆம் தேதி முதல் பிப்ரவரி 21-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதுகலைப் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பிக்கும் போதே கலந்தாய்விற்கும் சேர்த்து விண்ணப்பம் செய்ய வேண்டும். 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வினை 39,301 மாணவர்கள் எழுதினர். இந்தாண்டு அதிகளவில் மாணவர்கள் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் முதுகலை தொழிற்கல்விப் படிப்புகளில் சேர்வதற்கான அண்ணா பல்கலை கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது. தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு மூலம் எம்.பி.ஏ., (MBA), எம்.சி.ஏ (MCA) படிப்புகளுக்கும், முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகியவற்றிற்கு (CEETA-PG) நுழைவுத் தேர்வு தனித்தனியாக நடத்தப்பட உள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
இது குறித்து அண்ணா பல்கலைக் கழக பொது நுழைவுத்தேர்வு செயலாளர் ஸ்ரீதரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., (ME), எம்.டெக்., (M.Tech), எம்.பிளான் ஆகியவற்றில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும், எம்.பி.ஏ., எம்.சி.ஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வுவிற்கு (டான்செட் 2025) ஜனவரி 24-ஆம் தேதி முதல் பிப்ரவரி 21-ஆம் தேதி வரை https://tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இளங்கலை பொறியியல் படிப்பில் இறுதி செமஸ்டர் படித்து தேர்வு எழுதி மதிப்பெண் பட்டியல் இல்லாவிட்டாலும் விண்ணப்பிக்கலாம். எம்.சி.ஏ., எம்.பி.ஏ படிப்புகளுக்கு எஸ்.சி, எஸ்.சி.ஏ., எஸ்.டி பிரிவினருக்கு 500 ரூபாயும், பிற வகுப்பினருக்கு 1,000 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். இவர்களுக்கான பொது நுழைவுத் தேர்வு மார்ச் 22-ஆம் தேதி நடைபெறுகிறது.
CEETA, எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகிய முதுகலை பொறியியல் படிப்புகளுக்கு எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி பிரிவினருக்கு 900 ரூபாயும், இதர பிரிவினருக்கு 1,800 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். இவர்களுக்கு கலந்தாய்வு கட்டணமும் இதில் அடங்கும். இவர்களுக்கான நுழைவுத்தேர்வு மார்ச் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.