தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / education-and-career

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் மாணவி.. விவசாயி மகள் பிருந்தா சாதனை! - REPUBLIC DAY 2025

தேசிய அளவில் நடைபெற்ற வீர் கதா போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் மாணவி பரிசு பெரும் காட்சி
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் மாணவி பரிசு பெரும் காட்சி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2025, 10:57 AM IST

ராமநாதபுரம்:தேசிய அளவில் நடைபெற்ற வீர் கதா போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியும், விவசாயி அய்யாதுரையின் மகளுமான பிருந்தா புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய பாதுகாப்பு துறையும் கல்வித்துறையும் இணைந்து மாணவ மாணவியருக்கு தேசப்பற்றை ஊட்டும் வகையில் வீர் கதா போட்டியை நடத்தி வருகின்றன. இதில் முதல் இந்திய சுதந்திரப்போரில் பழங்குடியினரின் எழுச்சி, ராணி லட்சுமிபாய் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள், விடுதலைக்குப் பின் வீரதீர செயல்களுக்கான விருது பெற்றவர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் அறியச்செய்து அதன்மூலம் நாட்டுப்பற்றையும், குடிமை உணர்வையும் அவர்களிடம் வளர்க்கும் நோக்கில், ஓவியம், கவிதை, கட்டுரை, பல்லூடக விளக்கக் காட்சி போன்ற போட்டிகள் நடைபெறும்.

அந்த வகையில் இந்தாண்டு நடைபெற்ற போட்டிகளில் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் 2.31 லட்சம் பள்ளிகளிருந்து சுமார் 1.76 கோடி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 3-5, 6-8, 9-10, 11-12 ஆகிய வகுப்புகளில் ஒவ்வொரு பிரிவிலும் 25 மாணவர்கள் என தேசிய அளவில் மொத்தம் 100 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:சென்னை ஐஐடி: விளையாட்டு பிரிவில் தேசிய வீரர்கள் 5 பேர் சேர்க்கை!

அதில் ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு பயிலும் விவசாயி அய்யாத்துரை என்பவரின் மகள் அ.பிருந்தா, 9-10ஆம் வகுப்புப் பிரிவில் தேசிய அளவில் 25 பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாணவி பிருந்தா, வழிகாட்டி ஆசிரியர் (ETV Bharat Tamil Nadu)

இவர் ஆங்கில பட்டதாரி ஆசிரியரும் பள்ளியின் நூலகப் பொறுப்பாளருமான க.வளர்மதியின் வழிகாட்டுதலில் 'ராணி லட்சுமி பாய் என் கனவில் வந்தார். நம் நாட்டுக்கு நான் சேவை செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தார். இதற்காக, மாணவி அ.பிருந்தா, ரூபாய் 10 ஆயிரம் பரிசும், புதுடெல்லி கர்தவ்ய பாதையில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பை சிறப்பு விருந்தினராக நேரில் காணும் வாய்ப்பும் பெற்றுள்ளார்.

தமிழ்நாடு அளவில் தேர்வு செய்யப்பட்ட இருவரில் பிருந்தா மட்டும்தான் அரசுப் பள்ளி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, மாணவி அ.பிருந்தா, வழிகாட்டிய ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் க.வளர்மதி ஆகியோரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.சின்னராசு, பள்ளித் தலைமையாசிரியர் ச.யுனைசி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details