சென்னை: தமிழ்நாட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் முதல் சுற்றுக் கலந்தாய்வில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7 ஆயிரத்து 628 பேருக்கும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 1,806 பேருக்கும் தற்காலிகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் நாளை (ஆகஸ்ட் 30) காலை 10 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்து மருத்துவம் மற்றும் மாணவர் சேர்க்கைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், எம்பிபிஎஸ் படிப்பில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3 ஆயிரத்து 962 இடங்கள், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் 30 இடங்கள், கேகே நகர் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் 91 இடங்கள் என 4 ஆயிரத்து 83 இடங்களிலும், 22 தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 3 ஆயிரத்து 302 இடங்களும், 4 தனியார் பல்கலைக்கழகங்களில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 528 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
அதேபோல், பி.டி.எஸ் படிப்பில், சென்னை, புதுக்கோட்டை, கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 197 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 1,790 இடங்களும் காலியாக இருந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் முதல் சுற்றுக் கலந்தாய்வில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 21 ஆம் தேதி காலை 10 மணி முதல் 27ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலமாக கலந்தாய்வில் பங்கேற்று தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.