சென்னை:தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் இருக்கக்கூடிய எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 21ஆம் தேதி துவங்கியது. முதல் சுற்றுக் கலந்தாய்வில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் 27ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலமாக கலந்தாய்வில் பங்கேற்று, தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
முதல் சுற்றுக் கலந்தாய்வில் அரசு மற்றும் தனியார் மருத்துவகல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7628 பேருக்கும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 1806 பேருக்கும் தற்காலிகமாக 29ஆம் தேதி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, தேசிய மருத்துவ ஆணையம் கன்னியாகுமரி தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்ப்பதற்கு வழங்கிய அனுமதியை திரும்ப பெறுவதாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்திற்கு கடிதம் அனுப்பியது. அதன் அடிப்படையில், மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர விரும்பிய தற்காலிக இடங்களுக்கான ஒதுக்கீடுகள் மீண்டும் தரவரிசை அடிப்படையில் நேற்று இறுதியாக வெளியிடப்பட்டது.