சென்னை:சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி மற்றும் அக்கல்லூரியின் முன்னாள் மாணவர் சுனில் வாத்வானி ஆகியோர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று(ஜன.30) கையெழுத்தானது. உலகளவில் சிறந்த செயற்கை நுண்ணறிவுப் பள்ளிகளில் ஒன்றாகத் தரத்தை உயர்த்துவதுடன், தரவு அறிவியல் மற்றும் செயற்கைத் தொழில்நுட்பம் தொடர்பாக அரசின் கொள்கை வகுப்போருக்கு ஆலோசனை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி "தேசிய அளவில் முன்னாள் மாணவர் ஒருவர் 110 கோடி ரூபாய் வழங்கி இருப்பது இதுவே முதல்முறை என்றும், இது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகியவை முக்கிய நகர்வுகள் என்பதால், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியின் தேவை மிகவும் அவசியமாகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு சென்னை ஐஐடி உயர்தர பள்ளியைத் தொடங்கியுள்ளது.பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட முக்கிய அம்சங்களில் இணைந்து பணியாற்றுகின்றனர். வரும் கல்வியாண்டில் பிடெக் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு இளநிலையில் துவக்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். மேலும் ஜெஇஇ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
தற்பொழுது மாணவர்களுக்கு பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் பாடப்பிரிவில் 25 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். பிடெக், எம்டெக், எம்எஸ்சி, பிஎச்டி போன்ற படிப்புகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையதளம் சார்ந்த பட்டப்படிப்புகள் வழங்கப்பட உள்ளது.இதனை இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்துடன் இணைந்து செயல்படுத்தவுள்ளேம். இதற்கான மாணவர் சேர்க்கை ஜூலை 2024-ல் தொடங்கும். சர்வதேச பல்துறை முதுநிலை பாடத்திட்டமும் இப்பள்ளியில் இடம்பெறும்.