தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / education-and-career

சென்னை ஐஐடி வளாகத்தை பார்வையிட மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் அழைப்பு; எந்தெந்த நாட்களில் தெரியுமா? - IIT MADRAS

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களை ஜனவரி மாதம் இரண்டு நாள்கள் பார்வையிடலாம் என மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி கோப்புப்படம்
சென்னை ஐஐடி கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 13 hours ago

Updated : 8 hours ago

சென்னை: சென்னை ஐஐடியின் 'அனைவருக்கும் ஐஐடிஎம்' (IIT Madras for All) என்ற திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஐஐடி வளாகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், ஐஐடியின் அதிநவீன ஆராய்ச்சி மையங்கள் மற்றும் ஆய்வகங்களை 2025 ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பார்வையிடலாம் என ஐஐடி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை ஐஐடி கூறியுள்ளதாவது, சென்னை ஐஐடியின் தொலைநோக்குப் பார்வையின் சிறப்பு முன்னெடுப்பாக, திறந்தவெளி அரங்கு 2025 நிகழ்வு (The Institute Open House 2025) ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதன் மூலமாக, இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி சென்னையின் அதிநவீன ஆராய்ச்சி, முன்னோடித் தொழில்நுட்பங்கள், துடிப்பான கல்விச் சூழலை பொதுமக்கள் நேரில் கண்டறியலாம்.

மேலும், புத்தாக்க ஆராய்ச்சி, ஆய்வுத் திட்டங்கள், செயல் விளக்கங்கள் ஆகியவற்றை 60-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப அரங்குகளை பார்வையிடலாம். தொடர்ந்து, ஐஐடியில் இயங்கி வரும் 4 தேசிய ஆராய்ச்சி மையங்கள், 11 கல்வி நிறுவன ஆராய்ச்சி மையங்கள், 15 உயர் சிறப்பு மையங்களில் நடைபெற்று வரும் கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சிகள் மற்றும் ஆராய்ச்சி திட்டப்பணிகளை எடுத்துரைக்கும் 90-க்கும் மேற்பட்ட ஆய்வங்களையும் பொதுமக்கள் பார்வையிடலாம்.

பதிவு செய்ய?

ஐஐடியை பார்வையிட விரும்பும் பொதுமக்கள் பதிவு செய்வதற்கான கடைசி நாள் டிசம்பர் 25, 2024. எனவே, விருப்பமுள்ளவர்கள் shaastra.org/open-house என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நுண்கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் சிறப்பு இடஒதுக்கீடு.. விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

இது குறித்து, சென்னை ஐஐடி டீன் (மாணவர்கள்) சத்தியநாராயணன் என் கும்மாடி கூறுகையில், “ சென்னை ஐஐடிக்கு எல்லோரும் வருவதற்கு இது ஒரு பிரத்யேக வாய்ப்பு. இங்குள்ள மேம்பட்ட ஆய்வகங்களை பொதுமக்களுக்கு பார்வையிடுவதற்கு நிறுவனம் முழு ஆதரவையும் அளிக்கிறது. எதிர்காலத்தில் தலைமை வகிக்கவிருக்கும் இளம் தலைமுறையினரை ஊக்குவிக்க இது வாய்ப்பாக அமையும்.

சாஸ்த்ரா திருவிழா:

சென்னை ஐஐடியின் வருடாந்திர தொழில்நுட்பத் திருவிழாவான சாஸ்த்ரா 2025 ஜனவரி 3ஆம் தேதிமுதல் 7-ஆம் தேதி வரை வழக்கம்போல் நான்கு பகல் - நான்கு இரவு நடைபெற உள்ளது. இதில், முதல் இரண்டு நாட்கள் நடைபெறும் திறந்தவெளி அரங்கை, இணையதளம் மூலமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மற்றும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் நேரடியாகக் கண்டுகளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

தொடர்ந்து, சென்னை ஐஐடி இணைப் பாடத்திட்ட ஆலோசகர் முருகையன் அமிர்தலிங்கம், "சென்னை ஐஐடி அதிநவீன கற்பித்தலுடன் ஆராய்ச்சிக்கான ஆய்வகங்களை உருவாக்குவதில் சிறந்து விளங்குகிறது. 'அனைவருக்கும் ஐஐடிஎம்' (IITM for All) திட்டத்தின்கீழ் நடத்தப்படும் இந்நிகழ்வையொட்டி, இக்கல்வி நிறுவனத்தில் உள்ள 18 துறைகள் மற்றும் 45-க்கும் மேற்பட்ட உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி மையங்களைக் குறித்த நேரடி அனுபவத்தை பெறுவதுடன், இங்குள்ள அதிநவீன வசதிகள் குறித்து கண்டறியவும் வாய்ப்பாக அமையும்.

இதில், ஆர்வமுள்ள பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், தொழில்நுட்ப ஆர்வலர்கள் என அனைவரும் பார்வையிடலாம்," என்று தெரிவித்துள்ளார்.

Last Updated : 8 hours ago

ABOUT THE AUTHOR

...view details