சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பிடிஎஸ் (BDS) படிப்புகளில், 2024 - 2025ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேருவதற்கு ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்கு மணி தெரிவித்துள்ளார்.
அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு அட்டவணையை தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கை குழு நேற்று அறிவித்தது. அதன் அடிப்படையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் 2024 - 25ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்கு மணி ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஜூலை 31ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 8 தேதி மாலை 5 மணி வரை www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். மேலும் எஸ்சி, எஸ்சி ஏ மற்றும் எஸ்டி வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் எத்தனை இடங்கள்?: கடந்த 2023 - 24ஆம் கல்வி ஆண்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரியில் 5,550 இடங்களும், இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியில் 150 இடங்களும், 21 தனியார் மருத்துவக் கல்லூரியில் 3,400 இடங்களும் மூன்று தனியார் பல்கலைக்கழக கல்லூரிகளில் 450 இடங்கள் என 9,050 இடங்களில் எம்பிபிஎஸ் படிப்பிலும், வீடியோஸ் படிப்பில் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 1,950 இடங்கள் என மொத்தமாக 2200 இடங்களும் உள்ளன.