தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / education-and-career

"உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமூகநீதிக்கும், இடஒதுக்கீட்டிற்கும் எதிரானது" - டாக்டர்கள் சங்கம்! - PG MEDICAL ADMISSION ISSUE

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மாநில அரசுக்கென தனி ஒதுக்கீடு கூடாது என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மாநில உரிமைகளுக்கு எதிரானது என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், உச்சநீதிமன்றம்
டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், உச்சநீதிமன்றம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2025, 8:08 AM IST

Updated : Jan 30, 2025, 11:36 AM IST

சென்னை:முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மாநில அரசுக்கென தனி ஒதுக்கீடு கூடாது என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மாநில உரிமைகளுக்கு எதிரானதாக உள்ளதால், மாநில உரிமையை காத்திட, தமிழ்நாடு அரசு உடனடியாக மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"முதுநிலை மருத்துவப் படிப்புகளில் குடியிருப்பு அடிப்படையிலான இடஒதுக்கீடு (Residence based reservation) என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவை மீறுவதாகும் என்று ஜனவரி 29-ம் தேதியன்று நீதிபதி ஹிருஷிகேஷ் ராய், நீதிபதி சுதான்ஷு துலியா மற்றும் நீதிபதி எஸ்விஎன் பாட்டீல் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.

அரசியல் சட்டத்துக்கு எதிரானது:

எம்பிபிஎஸ் தவிர முதுநிலை மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் மாநில அரசுகள் தங்களுக்கென இடங்களை வைத்துக் கொள்ளக் கூடாது. நாம் அனைவரும் இந்தியாவில் தான் வசிக்கிறோம். எனவே, மாநிலங்கள் தங்களுக்கென தனி ஒதுக்கீடு வைத்துக் கொள்வது என்பது அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவுக்கு எதிரானது. அவ்வாறு மருத்துவ இடங்களை வாழ்விட அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதை அரசியல் சட்டம் அனுமதிக்காது.

எனவே, அனைத்து முதுநிலை மருத்துவ இடங்களையும், மேற்படிப்பு இடங்களையும் அகில இந்தியாவிற்கும் பொதுவானதாக்க வேண்டும் என்பது போன்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி கோட்பாட்டிற்கும், சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு, அரசு மருத்துவர்கள் இடஒதுக்கீடு, பெண்களின் உரிமைகளுக்கும் எதிரானதாகவும்.

பல்வேறு மாநிலங்களில் நீண்ட காலமாக மருத்துவக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணமாக, அந்த மாநிலங்களில் போதிய அளவிற்கு மருத்துவ மேற்படிப்பு இடங்கள் இல்லாத நிலை உள்ளது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல்வி இடங்கள் அதிகமாக உள்ளன. இந்நிலையில் மாநில அரசுகள் தங்களுக்கென மருத்துவ மேற்படிப்புகளில், இடங்களை தங்களுக்கென வைத்துக் கொள்ள கூடாது என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் கூறி இருப்பது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்களைக் கடுமையாக பாதிக்கும்.

சமூக நீதிக்கு பாதிப்பு:

ஏற்கனவே, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் 50 விழுக்காடு இடங்களை ஒன்றிய அரசு பறித்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் வழி வகுத்தது. அதனால், தமிழ்நாடு பெரும் இழப்புகளுக்கு உள்ளாகி வருகிறது. மிக முக்கியமாக உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் (super speciality) நூறு விழுக்காடு இடங்களையும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக பறித்துக் கொள்ளப்பட்டது.

அரசு மருத்துவர்கள் இடஒதுக்கீடு இதனால் பாதிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றத்தை நாடி 50 சதவீத இடஒதுக்கீட்டை சில ஆண்டுகளாகப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் முதுநிலை மருத்துவ இடங்களிலும், நூறு விழுக்காடு இடங்களை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு வழங்குவது மிகப் பெரும் பாதிப்புகளை உருவாக்கும். மாநில மக்களுக்கும், பொது சுகாதாரத்துறைக்கும், சமூக நீதிக்கும் மிகவும் பாதிப்பை உருவாக்கும்.

69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து:

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவ நிபுணர்கள் இல்லாத நிலை உருவாகும். தமிழ்நாட்டு மக்களுக்கு உயர் சிறப்பு மருத்துவச் சிகிச்சைகள் கிடைப்பதில் சிக்கல்களை, சிரமங்களை உருவாக்கும். தமிழ்நாட்டில் முதுநிலை மருத்துவப் படிப்பிலும் 69 விழுக்காடு இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்படுகிறது. இந்நிலையில், அனைத்து இடங்களையும் ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல உச்சநீதிமன்றம் வழிவகுத்தால், 69 சதவீத இட ஒதுக்கீடு ஒழித்துக் கட்டப்படும்.

இதையும் படிங்க:குரூப் 2 முதன்மை தேர்வு: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அப்டேட்!

ஒன்றிய அரசின் இடஒதுக்கீடே நடைமுறைப்படுத்தப்படும். முன்னேறிய வகுப்பில் உள்ள பொருளாதாரரீதியான பின்தங்கியோருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடும் நடைமுறைப்படுத்தப்படும். இது சமூகநீதிக்கு எதிராக அமைவதோடு, 69 விழுக்காடு இடஒதுக்கீட்டையும் ஒழித்துக் கட்டிவிடும். 69 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பெற்றுவரும் சமூகங்களைச் சேர்ந்த மருத்துவர்களை இது மிகவும் பாதிப்பிற்கு உள்ளாக்கும். எனவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதிக்கும், இடஒதுக்கீட்டிற்கும் எதிரானதாகும்.

மாநில நல்லிணக்கத்தைப் பாதிக்கும்!

அனைத்து மாநிலங்களிலும் இளநிலை முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்களை போதிய அளவிற்கு உருவாக்கிட வேண்டும். அதை விடுத்து ஒரு சில மாநிலங்களில் அதிகமாக உள்ள மருத்துவ மேற்படிப்பு இடங்களை, பிற மாநிலங்களுக்கு பறித்துக் கொடுப்பது மாநிலங்களின் நல்லிணக்கத்தைப் பாதிக்கும். மாநிலங்களிடையே, முரண்பாடுகளையும், மோதல்களையும் அதிகரிக்கும்.

பெண் மருத்துவர்கள் பாதிப்பு:

நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கும், மொழிவாரி மாநிலங்களின் உரிமைகளுக்கும், வளர்ச்சிக்கும் அச்சுறுத்தலை உருவாக்கும். திருமணம், குடும்ப வாழ்வு, குழந்தை வளர்ப்பு போன்ற பல காரணங்களால், வேறு மாநிலங்களுக்குச் சென்று படிக்க முடியாமல், பெண் மருத்துவர்கள் பாதிக்கப்படுவர். அரசு மருத்துவர்களும், அவர்களுக்கான ஒதுக்கீடு பறிபோகும் நிலையில் கடும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.

எனவே, தமிழ்நாடு அரசு சமூக நீதியையும், மாநில உரிமையையும், கூட்டாட்சி கோட்பாட்டையும் காத்திட இத்தீர்பிற்கு எதிராக சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக குரல் கொடுப்பதோடு, மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை காத்திடும் வகையில், ஒன்றிய அரசை வலியுறுத்தி உரிய சட்டங்களைக் கொண்டுவர முயல வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Last Updated : Jan 30, 2025, 11:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details