சென்னை:தமிழ்நாட்டில் கட்டாய தமிழ் கற்றல் சட்டம் 2006ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தனியார் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தமிழை ஒரு பாடமாக எடுத்து படிக்க வேண்டும். இந்த கட்டாய தமிழ் கற்றல் சட்டம் 2015-2016 முதல் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, 2024-25ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வினை எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
இத்திட்டம் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அதற்கு சிறுபான்மையினர் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் என்பது இல்லாமல் விருப்பப் பாடமாக எழுத அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் லதா, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “2024-2025ஆம் கல்வியாண்டில் 10, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும். அதற்கு எமிஸ் இணையதளத்தில் உள்ள மாணவர்களின் தகவல்கள் பயன்படுத்தப்பட உள்ளது. எனவே, அவர்களின் விவரங்களை தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.
மாணவரின் பெயர் தமிழ், ஆங்கிலத்தில் பிறப்புச் சான்றிதழில் உள்ளவாறு இருத்தல் வேண்டும். மாணவரின் பெயரை தமிழில் பதிவேற்றம் செய்யும் போது, தலைப்பெழுத்தும் தமிழில் இருக்க வேண்டும். அரசிதழில் பெயர் மாற்றம் செய்தவர்களுக்கு மட்டுமே அரசிதழின் நகலைப் பெற்று அதன் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.