தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / education-and-career

ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை? யுஜிசி வரைவு விதிமுறைக்கு எதிர்ப்பு! - AISEC

தேசிய கல்விக் கொள்கை (NEP) அடிப்படையில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதலுக்கு அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மாணவர்கள் சேர்க்கை,  அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி லோகோ கோப்புப்படம்
மாணவர்கள் சேர்க்கை, அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி லோகோ கோப்புப்படம் (Getty images)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2024, 1:36 PM IST

சென்னை:உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலை (UG) மற்றும் முதுகலை (PG) படிப்புகளுக்கு ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கைக்கு வகைசெய்யும் உள்ளிட்ட யுஜிசி வரைவு விதிமுறைகள் 2024-க்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் பொதுச்செயலாளர் தருண் கண்தி நஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், " பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வரைவு விதிமுறை 2024-ல் இனி ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க சாத்தியமில்லாததாகும். யுஜிசி-க்கு வழங்கப்பட்ட பல நுழைவு பல வெளியேற்ற (multiple entry and multiple exit) வாய்ப்பு தற்போது முதுகலைப் படிப்புகளுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.

இது அபத்தமான பரிந்துரை:

பள்ளியில் எந்தப்பாடத்தை முக்கிய பாடமாக எடுத்திருந்தாலும், எந்த பாடத்திலும் இளங்கலை படிக்கலாம் என்றும், இளங்கலையில் எந்தப் பாடத்தை முக்கியப்பாடமாக எடுத்திருந்தாலும் முதுகலையில் எந்தப் பாடத்தையும் படிக்கலாம் எனவும், ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்களைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உயர்கல்வி மாணவர்களுக்கு ஜாக்பாட்; இனி NEP அடிப்படையில் சேர்க்கை - வெளியான அறிவிப்பு!

இவையெல்லாம் அபத்தமான பரிந்துரைகளாகும். முந்தைய கற்றலை அங்கீகரிக்கும் (Recognition of Prior Learning - RPL) சான்றிதழ் அடிப்படையில் ஒரு மாணவர் உயர்கல்வியில் எப்படி சேர்க்கப்படுவார் என்பதற்கு சரியான வரையறை கொடுக்கப்படவில்லை. வேகமாக பட்டத்தை முடித்தல் (ஏடிபி) (Accelerated Degree Programme - ADP) அல்லது நீண்ட காலத்தில் பட்டத்தை முடித்தல் (இடிபி) (Extended Degree Programme - EDP) திட்டங்கள் மூலமாக ஒரு பட்டத்தை குறித்த காலத்திற்கு முன்பாகவோ அல்லது தாமதமாகவோ முடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளுக்கு கண்டனம்:

கற்றலை மையமாகக் கொண்ட கல்வி என்ற பெயரில் இந்த அபத்தமான திட்டங்கள் அனைத்தும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இவையெல்லாம் குறைந்த தரத்திலான அல்லது அறிவை வழங்காத பட்டங்களையே தரப்போகின்றன. தற்போது உயர்கல்வி நிறுவனங்களில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை, வகுப்பறைகள், ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. புதிய ஆசிரியர் பணியிடங்களும் உருவாக்கப்படவில்லை. அதே நேரம் கல்விக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடும் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டால், உயர்கல்வியில் தற்போது இருக்கும் ஒழுங்கும் முற்றிலும் தகர்ந்துவிடும். இந்த விதிமுறைகளை பின்பற்றாத உயர்கல்வி நிறுவனங்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்ற முன்மொழிவை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது உயர்கல்வி நிறுவனங்களின் தன்னாட்சியை அபகரிக்கும் மோசமான செயலாகும். இந்த புதிய வரைவு விதிமுறைகளை உடனடியாகத் திரும்பப்பெற அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி (AISEC) வலியுறுத்துகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details