சென்னை:இந்தியர்களின் சேமிப்பில் முக்கிய பங்கு வகிப்பது தங்கம் தான். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும், பரிசாக வழங்குவதற்கும் தங்கம் பயன்படுத்தப்படுவதால், அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் தங்கத்துக்கு எப்போதும் மவுசு இருந்தே கொண்டே உள்ளது. அப்படிப்பட்ட தங்கத்தின் விலையானது, சர்வதேச பொருளாதாரச் சூழலின் மத்தியில் கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்த வகையில், சமீபமாக தங்கத்தின் விலை ஏற்றத்தைக் கண்டு வந்தது. அதனால் நகை முதலீட்டாளர்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். இந்த நிலையில், ஜூலை 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி சுங்கவரியை 6 சதவீதமாகவும், பிளாட்டினத்துக்கான வரியை 6.5 சதவீதமாகவும் குறைத்து அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஒரே நாளில் தங்கத்தின் விலை தாறுமாறாகச் சரிவை சந்தித்தது.
தற்போது, மூன்றாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 3,160 குறைந்துள்ளது. அந்த வகையில் சென்னையில் இன்று மட்டும் கிராமுக்கு ரூ.60 குறைந்து, சவரனுக்கு ரூ.480 ம் குறைந்து விற்பனையாகி வருகிறது.