சென்னை: தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் கடந்த சனிக்கிழமை முதல் இன்று வரை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1080 வரை உயர்ந்துள்ளது. தற்போது தங்கத்தின் விலை சவரன் ரூ.60 ஆயிரத்தை நெருங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.7450-க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.59600-க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.104-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.104000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் ஈடிவி பாரத் செய்திக்கு பேசுகையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டிருக்க கூடிய தங்கத்தின் தேவை மற்றும் இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி அதே போல் மற்ற துறையில் இருந்து முதலீடு செய்பவர்களுடைய பார்வை தங்கத்தில் முதலீடு செய்வதற்காக திரும்பி உள்ளதால் தங்கத்தின் விலை தற்போது கூடி வருகிறது. தற்போது வரை கூடிக் கொண்டே செல்லும் தங்கத்தின் விலையான மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் ஒரு கிராம் 8000 ரூபாயை தொடும் என தெரிவித்தார்.
மற்ற துறையில் முதலீடு செய்வதால் வீழ்ச்சி ஏற்படும் என கருதி முதலீட்டாளர்கள் ரியல் எஸ்டேட், ஃபைனான்ஸ் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்வதை பார்க்கிலும் தங்கத்தில் முதலீடு செய்வதால் நல்ல லாபமும் பாதுகாப்பும் இருக்கும் என கருதி உலக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
பங்கு சந்தையில் வளர்ச்சியில்லை என்பதால் சந்தையில் மற்ற துறைகளின் முதலீடு செய்பவர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்து வருவதால் வரும் நாட்களில் தங்கத்தின் விலை உயர கூடும் என தெரிவித்துள்ளார்.
தங்கம் என்றாலே இன்று விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இன்றைய காலகட்டத்தில் வீடுகளில் தங்கம் வைத்திருப்பது அவசர தேவைகளுக்கு உதவும் என்று பார்க்கப்படுகிறது. அதனால், தங்கம் மீதான விருப்பம் ஒரு போதும் பொதுமக்களிடம் குறைவதில்லை. எனவே, தங்கம் என்பது அனைவராலும் மதிக்கப்படுகிறது.