சென்னை : சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கவுகாத்திக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று மாலை 3.50 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 154 பயணிகள் 8 ஊழியர்கள் என 162 பேர் இருந்தனர். இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.
இதையடுத்து உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் கொடுத்தார். இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானத்தை உடனடியாக சென்னைக்கு திருப்பிக் கொண்டு வந்து தரையிறக்கும்படியும் அதோடு சென்னை விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யவும் உத்தரவிட்டனர்.
அதன்படி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பின்பு இந்த விமானம் இன்று மாலை 4.28 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பத்திரமாக வந்து தரை இறங்கியது. உடனடியாக விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.
விமானத்தை பழுது பார்க்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த விமானம் பழுதுபார்க்கப்பட்டு அல்லது மாற்று விமானம் மூலம் பயணிகள் அனைவரும் இன்று இரவுக்குள் சென்னையில் இருந்து கவுகாத்திக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மேலும் இதனிடையே டெல்லியில் உள்ள டி ஜி சி ஏ எனப்படும் டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேசன் இது குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கவுகாத்தி புறப்பட்ட விமானத்தில் நடுவானில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்ட சம்பவம் சென்னை விமான நிலையத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.