மதுரை:மதுரை மாட்டுத்தாவணி (எம்ஜிஆர்) பேருந்து நிலையம் அருகே மலர் வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு அலங்காநல்லூர், பாலமேடு, உசிலம்பட்டி, ஆவியூர், நெடுங்குளம், வலையங்குளம், திருமங்கலம், சிலைமான், மேலூர், கொட்டாம்பட்டி உள்ளிட்ட மதுரை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளிலிருந்தும், அண்டை மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இவற்றில் மதுரைக்கே சிறப்பான சேர்க்கும் மல்லிகை பூக்களுக்கு எப்போதும் தனிச்சந்தை உள்ளது. மணம், தன்மை, தரம் காரணமாக மதுரை மல்லிகைக்கு மத்திய அரசின் புவிசார் குறியீட்டு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால், மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கும் மதுரையிலிருந்து டன் கணக்கில் மல்லிகைப்பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மதுரை மல்லிகை இன்று கிலோ ரூ.5,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் கூறுகையில், “அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் என்பதால் மல்லிகைப் பூவின் விலை கடுமையாக ஏற்றம் கண்டுள்ளது.
இதையும் படிங்க:தங்கம் விலை 10 நாட்களில் சவரனுக்கு ரூ.2,280 வரை உயர்வு.. அதிகரிப்புக்கு காரணம் என்ன?
பிற பூக்களான மெட்ராஸ் மல்லி ரூ.2000, பிச்சி ரூ.2500, முல்லை ரூ.2500, செவ்வந்தி ரூ.200, சம்பங்கி ரூ.270, செண்டு மல்லி ரூ.80, கனகாம்பரம் ரூ.2,000, ரோஸ் ரூ.280, பட்டன் ரோஸ் ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.320, கோழிக்கொண்டை ரூ.80, அரளி ரூ.230, தாமரை (ஒன்றுக்கு) ரூ.50 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் முல்லை, பிச்சிப் பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அது மட்டுமன்றி, மேற்கண்ட பூக்களின் வரத்து பெருமளவு குறைந்துள்ளது. இந்நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் சற்று விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.