தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசியல் சட்டத்தின் முகவுரையில் திருத்தம் கோரிய மனுக்கள்...உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற பரபரப்பு வாதங்கள்! - SC ON PREAMBLE

மதசார்பின்மை என்பது அரசியல் சட்டத்தின் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும். இந்த பகுதி திருத்தப்படக்கூடாது என்பது தெளிவுபடுத்தப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசியல் சட்டத்தை வணங்கும் பிரதமர் நரேந்திர மோடி
அரசியல் சட்டத்தை வணங்கும் பிரதமர் நரேந்திர மோடி (Image credits-PIB)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2024, 7:25 PM IST

புதுடெல்லி: மதசார்பின்மை என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு என்றும், பல்வேறு தீர்ப்புகளில் அது திருத்தப்படக் கூடாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசியல் சட்டத்தின் முகவுரையில் மதசார்பின்மை, சோஷலிஸ்ட் ஆகிய வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், முகவுரையில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, பல்ராம் சிங், வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதி கன்னா,"மதசார்பின்மை என்பது அதன் பகுதியாக(அரசியல் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பாக) இருக்கிறது என்று பல்வேறு தீர்ப்புகளில் கூறியிருக்கின்றோம்.எனவேதான் அந்த அடிப்படை கட்டமைப்பு பகுதியில் திருத்தம் மேற்கொள்ளப்படக் கூடாது என்ற அந்தஸ்து அதற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு அது குறித்து தெரிய வேண்டுமெனில் என்னால் அவற்றை மேற்கோள் காட்ட முடியும்.

அரசியல் சட்டத்தில் சம உரிமை மற்றும் சகோதரத்துவம் என்ற வார்த்தை உபயோகிக்கப்பட்டிருப்பது அதே போல பகுதி 3ன் கீழ் உள்ள உரிமைகளை அரசியல் சட்டத்தின் முக்கிய அம்சமாக மதசார்பின்மை இருந்ததற்கான தெளிவான அறிகுறி உள்ளது.

மதசார்பின்மையைப் பொறுத்தவரை, அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்போது, விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. பிரஞ்ச் மாதிரி மட்டுமே நம்மிடம் உள்ளது. நாம் மதிப்பீடு செய்யும் வழியானது வித்தியாசமாக இருக்கலாம்.உரிமைகள் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் அதனை சமன்படுத்தியுள்ளோம்.

சோஷலிஸ்ட் என்ற வார்த்தை, மேற்கு உலக கருத்தாக்கத்தின் கீழ் நீங்கள் சென்றால், அது வித்தியாசமான பொருளைக் கொண்டிருக்கிறது. ஆனால், அதனை நாம் பின்பற்ற முடியாது. மாற்றங்கள் நடந்திருப்பதில் நாம் மிகவும் மகிழ்கின்றோம். பொருளாதார வளர்ச்சி நடந்திருக்கிறது," என்றார்.

முகவுரையில் திருத்தம் தேவை: இது குறித்த வாதங்களை முன் வைத்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, "முகவுரையானது 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதியில் அரசியல் சட்ட அவையால் ஏற்கப்பட்டது. அதில் இணைக்கப்பட்டது மெய்யானது அல்ல. எனவே அது திருத்தம் செய்யப்பட வேண்டும். முகவுரையானது, அது சொல்லும் பொருளில் சரியாக இல்லை. தனியாக ஒரு பத்தியாக கூடுதல் பகுதி இணைக்கப்பட வேண்டும்," என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "திருத்தங்கள் எப்போதுமே மேற்கொள்ளப்படுகின்றன. அரசியல் சட்டம் பல திருத்தங்களைக் கொண்டுள்ளது. திருத்தப்பட்ட பகுதிகள் அடைப்புக்குறிக்குள் உள்ளன. 42 ஆவது சட்டத்திருத்தம் குறித்து எல்லோருக்கும் தெரியும். அதே போல அரசியல் சட்டத்தில் இதர திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன,"என்றார்.

அப்போது வாதிட்ட சுப்பிரமணியன் சுவாமி,"முகவுரை இரண்டு பகுதியாக இருக்க முடியும். ஒரு பகுதி ஒரு தேதியிலும், இன்னொரு பகுதி இன்னொரு தேதியிலும் அருக்கலாம். இது அனுமதிக்கப்பட்டிருக்கிறது," என்றார்.

நீங்கள் இந்தியா மதசார்பின்மையாக இருப்பதை விரும்பவில்லையா?: வழக்கு விசாரணையின்போது மனுதாரர்களிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி கன்னா,"இந்தியா மதசார்ப்பற்றதாக இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?"என்று கேட்டார்.

இந்த கேள்விக்கு மனுதாரர் பல்ராம் சிங் சார்பில் வாதத்தை முன் வைத்த வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், "இந்தியா மதசார்பற்ற நாடு அல்ல என்று சொல்லவில்லை. இந்த திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றோம். "சோசலிசம்" என்ற வார்த்தையைச் சேர்ப்பது தனிமனித சுதந்திரத்தைக் குறைக்கும் என்று அம்பேத்கர் கருத்து தெரிவித்திருந்தார்,"என்று கூறினார்.

அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதி கன்னா,"நாட்டின் வாய்ப்புகள் மற்றும் வளம் ஆகியவற்றில் சம உரிமை நிலவ வேண்டும் என்றும் அதனை சம உரிமையோடு விநியோகிக்க வேண்டும் என்றும் பொருள் கொள்ளலாம். இதற்கு மேற்கத்திய நாடுகளின் பொருளை எடுத்துக் கொள்ள வேண்டாம்," என்றார்.

மேலும் தொடர்ந்து வாதிட்ட வழக்கறிஞர் ஜெயின், "1976ஆம் ஆண்டு அரசியல் சட்டம் 42ஆவது திருத்தம், இந்த மாற்றங்களை பாதிக்கிறது. ஒருபோதும் இது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை," என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கன்னா,"இந்த வார்த்தைகள் பல்வேறு விளக்கங்கள் கொண்டவை. இரண்டு வார்த்தைகளும் இன்று வெவ்வேறு விளக்கங்களைக் கொண்டுள்ளன. நீதிமன்றங்கள் கூட அவற்றை மீண்டும் மீண்டும், அடிப்படைக் கட்டமைப்பின் (அரசியலமைப்புச் சட்டத்தின்) ஒரு பகுதியாக அறிவித்துள்ளன" என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து நவம்பர் 18ஆம் தேதி தொடங்கும் வாரத்திற்கு இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மனுதார ரின் வழக்கறிஞர்கள் இது தொடர்பாக மேலும் ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Image credits-ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details