செப்டோ (Zepto) ஆன்லைன் டெலிவிரி நிறுவனம் மூலம் வாங்கிய ஹெர்ஷே (Hershey) சாக்லேட் சிறப்பில் எலி இறந்து கிடந்ததாக இன்ஸ்டாகிராம் பயனர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பிரமி என்ற இன்ஸ்டாகிராம் பயனர் செப்டோ என்ற ஆன்லைன் டெலிவிரி நிறுவனம் மூலம் ஹெர்ஷே சாக்லேட் சிரப்பு வாங்கியுள்ளார்.
ஹெர்ஷே சாக்லேட் சிரப்பின் சீலை உடைத்த அந்த பெண் அதை பிரவுனி கேக் மீது ஊற்றி சாப்பிடத் தொடங்கியுள்ளார். முதலில் சாக்லேட் சிரப்பில் முடி வெளி வந்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ந்து போன அந்த பெண், பாட்டிலில் உள்ள சாக்லேட் சிரப்பை மொத்த பாத்திரத்தில் ஊற்றியுள்ளார்.
இதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில், பாட்டிலில் இருந்து இறந்த நிலையில் எலி வெளியே வந்து விழுந்துள்ளது. இதைக் கண்ட குடும்பத்தினர். அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் சாக்லேட் சிரப்பில் எலி இறந்து கிடப்பதை அறியும் முன்னரே தன் வீட்டில் உள்ளவர்கள் அதை சாப்பிட்டதாகவும் அதனால் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து ஹெர்ஷே நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் "இதற்கு மன்னிக்கவும். பாட்டிலில் உள்ள குறிப்பு எண். UPC மற்றும் உற்பத்திக் குறியீட்டை (manufacturing code) எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அனுப்பவும். எங்கள் குழு உறுப்பினர்களில் ஒருவர் உங்களுக்கு உதவி செய்வார்" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக மும்பையை சேர்ந்த மருத்துவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித விரல் போன்று கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தொடர்பாக விரல் போன்று ஐஸ்கிரீமில் கிடந்த பொருளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து சோதனைக்காக அனுப்பினர்.
அதேபோல் நேற்று (ஜூன்.18) கர்நாடக மாநிலம் பெங்களூரு அடுத்த சார்ஜா நகரில் அமேசான் நிறுவனம் மூலம் கேமிங் டிவைஸ் ஆர்டர் செய்தவர்களுக்கு நாகப் பாம்பு டெலிவிரி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி அடுத்தடுத்து நிகழும் சம்பவங்களால் மக்களிடையே அச்ச உணர்வு நிலவுகிறது.
இதையும் படிங்க:"நாடாளுமன்றத்தில் தடுத்து நிறுத்தப்பட்டேன்"- திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா பரபரப்பு குற்றச்சாட்டு! என்ன நடந்தது? - DMK MP MM Abdulla