பெங்களூரு: கர்நாடகாவில் பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக அங்கு பரவலாக மழை கொட்டி வருகிறது. வறண்ட நிலையில் இருந்த காவிரி ஆற்றின் நீர் தேக்கங்கள் அனைத்தும் தற்போது படிப்படியாக நிரம்பி வருகின்றன. கடந்த ஆண்டு பருவமழை பெய்த பருவமழையை காட்டிலும் தற்போது அதிக அளவில் கர்நாடகாவில் மழைப் பொழிவு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை வாரியம் ஜூலை 12ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை தமிழகத்திற்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்து விடக் கோரி பரிந்துரைத்துள்ளது. இருப்பினும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுத்து வருகிறது. காவிரி ஆற்றில் இருந்து உடனடியாக தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடக அரசு, ஜூலை இறுதி வரை மழை மற்றும் நீர் சேமிப்பை மதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து பேசி வருகிறது.
தற்போது, நான்கு காவிரிப் படுகை நீர்த்தேக்கங்களிலும் 60 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளதாகவும், இதைக் கொண்டு உள்ளூர் விவசாயத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று மாநில அரசு கூறுகிறது. ஹாரங்கி அணையில் 76 சதவீதம், ஹேமாவதியில் 56 சதவீதம், கேஆர்எஸ் அணையில் 54 சதவீதம், கபினியில் 96 சதவீதம் என நீர்த்தேக்க அளவு அதிகரித்து காணப்பட்டாலும், முழு கொள்ளளவைக் காட்டிலும் சுமார் 19 முதல் 20 டிஎம்சி வரை பற்றாக்குறை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை பொழிவின் அளவு மற்றும் மாநிலத்தின் விவசாயக் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதை மேற்கொள்காட்டி கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டிகே சிவக்குமார், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாததை நியாயப்படுத்துவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் மக்களவை கொறடாவாக நியமனம்! வேறு யாருக்கெல்லாம் என்ன பதவி? - Lok Sabha Session 2024