சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு சட்டப்பேரவை பதவியேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்து தற்போது நான்காவது ஆண்டு நடைபெற்று வரும் நிலையில், மு.க.ஸ்டாலின் மகனும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. இது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியது.
இது குறித்து திமுக இளைஞரணி விழாவில் உதயநிதி ஸ்டாலின், "தான் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக வெளியான வதந்தி, கிசுகிசுக்களை நம்ப வேண்டாம்" என கூறினார். அதே நேரத்தில், மூத்த அமைச்சர் துரைமுருகன் இந்த விவகாரம் குறித்து, “உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தான் முடிவெடுப்பார்” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்திய அரசியல் வரலாற்றில் தந்தை ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த நேரத்தில், அவர்களது மகன் துணை முதலமைச்சர் அல்லது சட்டமன்ற உறுப்பினராக உயர் பதவி வகித்தது குறித்த விவரங்களைக் காணலாம்
பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பதல் - மகன் சுக்பிர்:
2009 - கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி பஞ்சாப் முதலமைச்சராக பிரகாஷ் சிங் பதல் இருந்த போது, அவரது மகன் சுக்பிர் பஞ்சாப் மாநிலத்தின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அடுத்த ஆறு மாத காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படாததால், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் துணை முதலமைச்சராக அவர் பதவி ஏற்றார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி - மகன் மு.க.ஸ்டாலின்:
2009 - 2011 - கடந்த 2009ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்றார். மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல் துணை முதலமைச்சர் என்ற பெருமையையும் பெற்றார்.