புதை குழியில் தள்ளும் சைபர் க்ரைம் மோசடிகள்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? - types of cybercrime in tamil - TYPES OF CYBERCRIME IN TAMIL
Cyber Crime Series: ஆன்லைனில் என்னென்ன மாதிரியான சைபர் குற்றங்கள் நடந்து வருகிறது என்பதை அறிந்து சைபர் மோசடிகளில் இருந்து மக்கள் ஏமாறாமல் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளதோ அந்த அளவுக்கு சைபர் மோசடிகளும் பெருகியுள்ளன. கண்ணுக்கு தெரிந்த நபர்களை விட தெரியாதவர்களிடம் பணத்தையும், நிம்மதியையம் இழக்க செய்யும் சைபர் மோசடிகளில் இருந்து ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்கு, ஆன்லைனில் என்னென்ன வகையில் சைபர் மோசடிகள் நடந்து வருகிறது என்பதை நாம் அறிந்துகொள்வது தேவையாக உள்ளது.
1) இணையதள மோசடிகள்:செல்போனிலோ அல்லது கம்பியூட்டரிலோ நாம் ஏதாவதொரு இணையதள பக்கத்தில் இருக்கும் போது அந்த பேஜிக்குலேயே பாப்-அப் நோட்டிபிகேஷன் வருவதை நாம் பார்த்திருப்போம். அதை கிளிக் செய்தால் வேறொரு பக்கத்துக்கு செல்லும். அதுவும் ஒரு வகை விளம்பர யுக்திதான். சைபர் மோசடியில் ஈடுபடுபவர்கள் கவர்ச்சியான பாப்-அப் நோட்டிபிகேஷனை அனுப்பி ' மார்க்கெட் ரேட்டை விட மிக குறைந்த விலையில் செல்போன்கள் விற்கப்படுவதாக' விளம்பரம் செய்வார்கள். இதனால் ஈர்க்கப்படும் பயனர்கள் அந்த நோட்டிபிகேஷனை கிளிக் செய்து பார்த்தால், குறிப்பிட்ட செல்போன்களின் வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் ஓவர் பில்டப் செய்யப்பட்டிருக்கும். மேலும், ஒரு செல்போன் வாங்குவதைவிட கணிசமான எண்ணிக்கையில் வாங்கினால் இன்னும் விலை குறைவாக இருக்கும் என்று கூறப்பட்டிருக்கும். அதை நம்பி முன்கூட்டியே பணத்தை அனுப்பினால் ஏமாற்றப்படுவீர்கள்.
ஹைதராபாத்தில் உள்ள ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தின் பெண் நிர்வாகி ஒருவர் இதை நம்பி தனது ஊழியர்களுக்கு அதிகளவில் செல்போன்களை ஆர்டர் கொடுத்து முன்கூட்டியே 20 லட்சம் ரூபாய் ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். அதன் பிறகு ஆர்டர் செய்த செல்போன்களும் வரவில்லை, சம்மந்தப்பட்ட எண்ணும் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. பிறகு தான் ஏமார்ந்துவிட்டதை அறிந்த அந்த பெண் சைபர் க்ரைமில் புகார் கொடுத்தார்.
சைபர் க்ரைமில் விழிப்போடு இருங்கள் (GFX - ETV Bharat Tamil Nadu)
2) நிறுவன உரிமை மோசடி:பிரபல நிறுவனங்கள், கடைகள், ஹோட்டல்கள் ஆகியவற்றின் பெயர்களில் புது கிளைகளை தொடங்க தனி நபர் விருப்பப்பட்டால் அதற்கான உரிமையை சம்மந்தப்பட்ட நிறுவனம் வழங்கும். அதற்கான அனுமதி பெற, நிறுவனம் கேட்கும் தொகையை தனி நபர் வழங்கி உரிமைக்கான ஆவணங்களை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், மோசடியாளர்கள் தங்களை பிரபல நிறுவனங்களின் பிரதிநிதிகளாக காட்டிக்கொண்டு போலி ஆவணங்களை வழங்கி பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி விடுகின்றனர். உதாரணமாக,
ஹைதராபாத்தில் ஒருவருக்கு ரூ. 26 லட்சத்திற்கு கே.எப்.சி-யின் போலியான உரிமை ஆவணங்களை கொடுத்துவிட்டு பணத்தை ஏமாற்றியுள்ளார். அதேபோல, வேறொருவர் எரிவாயு டீலர்ஷிப் பெறுவதாக நினைத்து 45 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.
3) அந்நிய செலாவணி வர்த்தக மோசடி:அந்நிய செலாவணி வர்த்தக மோசடிகளும் இந்த பட்டியலில் உள்ளது. குறிப்பாக இதற்கு 'வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோட்டோகால்' எனப்படும் இணையவழி ஒலி பரிமாற்றம் மூலம் வாடிக்கையாளர்களுடன் உரையாடல் நடத்தி, அந்நிய செலாவணி வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகளாக மோசடியாளர்கள் காட்டிக்கொள்கிறார்கள். மேலும், சர்வதேச பரிவர்த்தனை அதிகரிப்பதால், நாணய பரிமாற்றத்திற்கான தேவை உள்ளது என்றும், வாடிக்கையாளர்களிடம் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் கமிஷனே இல்லாமல் அதிக லாபத்தை பெறலாம் என்றும் உறுதியளிக்கின்றனர்.
இதனால் ஈர்க்கப்படும் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்கிறார்கள். தொடக்கத்தில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற கூடுதலான கமிஷன் தொகையும் வழங்கப்படுகிறது. அதற்கு பிறகு வாடிக்கையார்களிடம் இருந்து போதுமான தொகையை பெற்றதும் மோசடியாளர்கள் காணாமல் போய்விடுகின்றனர். உதாரணமாக, ஹைதராபாத் கச்சிபௌலியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் இத்தகைய மோசடியில் 73 லட்சத்தை இழந்துள்ளார்.
சைபர் க்ரைமில் இருந்து தப்பிக்க வழி (GFX - ETV Bharat Tamil Nadu)
4) பகுதி நேர வேலை மோசடி:சோசியல் மீடியாவில் பகுதி நேர வேலை தேடுபவர்கள் இதில் ஏமாற்றப்படுகின்றனர். வீட்டில் பொழுதை கழிக்கும் பெண்கள், வேலையின்றி இருக்கும் பட்டதாரிகள் அதிகளவில் டார்கெட் செய்யப்படுகின்றனர். இன்ஸ்ட்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரபல நிறுவங்களில் பகுதி நேர வேலை வாய்ப்பு என விளம்பரப்படுத்தி அந்த நிறுவனங்களுக்கு கூகுளில் ரேட்டிங் போட்டும், பாசிட்டிவான ரிவ்யூ எழுதியும் சம்பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த பகுதி நேர வேளையில் சேர முன்தொகையும் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற மோசடியில் அரசு ஊழியர் ஒருவர் தனது 84 லட்சம் ரூபாயை இழந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
5) பங்குச் சந்தை முதலீடு மோசடி:பங்குச் சந்தையில் முதலீடு செய்வது இப்போது சாதாரணமாகிவிட்டது. ஆன்லைனில், எந்த நிறுவனப் பங்குகள் உயரும்? இதில் முதலீடு செய்யலாம் என்பதை தேடுபவர்கள் இதில் ஏமாற்றப்படுகிறார்கள். பங்கு சந்தை முதலீட்டில் எக்ஸ்பர்ட் என தங்களை போலியாக விளம்பரப்படுத்தி, நாங்கள் சொல்வதில் காலை முதலீடு செய்தால் மாலைக்குள் லாபத்தை ஈட்டிவிடலாம் என்று ஆசை வார்த்தை கூறி அதிக தொகையை மட்டுமே முதலீடு செய்ய வைக்கின்றனர். அதன்படி, அந்த ஷேரில் (Share) அதிக லாபம் ஈட்டப்பட்டுள்ளதை முதலீடு செய்தவருக்கு காண்பித்து பின்னர் அந்த நபரின் பங்கு சந்தை குறித்த விவரங்களை பெற்றுக்கொண்டு ஷேர் தொகையை இவர்களே சுருட்டி விடுகின்றனர். ஹைதராபாத்தில் ஒருவர் இத்தகைய மோசடியில் 36 லட்சத்தை இழந்துள்ளார்.
6) கிரிப்டோ கரன்சி மோசடி:கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்பவர்களும் அதிகரித்து வருகின்றனர். பொதுவாக கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வங்கிக்கோ அல்லது நிதி நிறுவனத்துக்கோ செல்ல வேண்டிய தேவையில்லை. அதற்கான கிரிப்டோ பரிமாற்ற தளம் அல்லது செயலியில் பதிவு செய்தாலே போதும். இந்நிலையில், மோசடியாளர்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் மூலம் மக்களை தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்கள் பெரிய லாபத்தை உறுதியளிக்கிறார்கள். முதலீடு செய்தால், விரைவில் நிறைய பணம் சம்பாதிப்பீர்கள் என்று தூண்டி விடுவார்கள். ஆனால், நீங்கள் முதலீடு செய்தவுடன் உங்கள் பணத்தை நீங்கள் எடுக்க முடியாது. ஹைதராபாத்தை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் இப்படி ஏமார்ந்து 78 லட்சத்தை இழந்துள்ளார்.
7) பொன்சி திட்டம்:பொன்சி என்பது கிட்டத்தட்ட எம்எல்எம் போன்ற முறையை போலத்தான். முந்தைய முதலீட்டாளர்களுக்கு வருமானம் ஈட்டுவதற்காக புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதை நம்பியிருக்கும் ஒரு திட்டம். ஒரு பங்குத் தரகு நிறுவனத்தில் ஆட்களை சேர்த்து விட்டால் கமிஷன் கிடைக்கும் என்று சொல்லி அணுகுவார்கள். பெரும்பாலும் வாட்சப் மூலம் இந்த மோசடி நடந்து வருகிறது. இதில் சேரும் உறுப்பினர்கள் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். ஆட்களை சேர்க்க சேர்க்க தொடக்கத்தில் முதலீட்டாளர்களுக்கு கமிஷனும் வழங்கப்படுகிறது. ஆனால், போதுமான முதலீடு வந்ததும் அல்லது ஆட்கள் சேர்ப்பு குறைந்ததும் அந்த சுழற்சி அப்படியே நின்றுவிடும். இதற்கு மூளையாக செயல்பட்ட குழுவை தவிர பல நூறு உறுப்பினர்கள் முதலீடு செய்து ஏமார்ந்து விடுவார்கள். இதில் பாதிக்கப்பட்டவர்கள் 582 கோடி ரூபாய் வரை இழந்துள்ளனர் என்றும் 20 ஆயிரத்து 500 வழக்குகள் பதிவாகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
காவல்துறை என்ன சொல்கிறது?:சைபர் மோசடி குறித்து சிஐடியின் கூடுதல் தலைமை இயக்குநர் ஷிகா கோயல் நமது ஈடிவி பாரத்திடம் தெரிவிக்கையில், நாட்டிலேயே சைபர் குற்றங்களில் முதன்மையாக இருப்பது முதலீடு மோசடிதான். பங்குசந்தை போன்ற முதலீட்டில் மக்களின் பணத்தை இரட்டிப்பாக்குவோம் எனக்கூறி ஏமாற்றும் செயல்களில் மோசடியாளர்கள் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவர்கள் இதில் முதலீடு செய்யலாம், எது டிரெண்டிங்கில் உள்ளது, எதில் லாபம் பெறலாம் என்று ஆசையை தூண்டி மோசடி வலையில் வீழ்த்துகின்றனர் என அவர் கூறினார்.
பங்கு வர்த்தகத்தின் அடிப்படைகள்:எந்த நிறுவனமும் தங்கள் பங்குகளை வாங்குவதற்கு ஒரு கணக்கை உருவாக்க அனுமதிக்காது, ஏனெனில் பங்குகளை பரிமாற்றங்கள் மூலம் மட்டுமே விற்க முடியும். எந்த ஒரு பங்கு முதலீட்டாளரும் முதலீட்டு முடிவை எடுப்பதற்கு முன்பு அந்த நிறுவனத்தைப் பற்றி கூகுளில் தேடி பார்த்து அறிந்துகொள்வது அவசியம் என்று அறிவுறுத்தியுள்ள காவல்துறை, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க எந்தவொரு தனிப்பட்ட கணக்குக்கும் பணத்தை மாற்ற வேண்டாம் என்றும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.