சண்டிகர்:பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றானஹரியானாவில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜிமானா செய்துள்ளார். ஏற்கனவே அம்மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த எம்பி பிரிஜேந்திர சிங் அண்மையில் காங்கிரஸ் இணைந்த நிலையில் அம்மாநிலத்தில் பெரும் அரசியல் குழப்பம் சூழ்ந்துள்ளது. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள மனோகர் லால் கட்டார் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கர்னல் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரக்கூடிய வேளையில் நாடு முழுவதும் பரபரப்பிற்குப் பஞ்சம் இருக்காது என்பதைப் போல், ஹரியானா மாநிலத்தில் பாஜக மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி இடையே கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளது. இதில் பெரும்பான்மை பெற 46 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும்.
இங்குக் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும், இந்தியத் தேசிய லோக் தள் மற்றும் ஹரியானா லோக்கித்ட் கட்சி தலா ஒரு இடங்களிலும் வென்று இருந்தது. இது தவிர 7 சுயேச்சை சட்டப் பேரவை உறுப்பினர்களும் வென்று உள்ளனர்.
இங்குப் பெரும்பான்மை நிரூபிக்க 46 எம்.எல்.ஏக்கள் வேண்டும் என்பதால் 40 எம்.எல்.ஏக்களை கொண்டு இருந்த பாஜக - ஜேஜேபிவுடன் கை கோர்த்து ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஹரியானா மாநிலத்தில் உள்ள 10 மக்களவை தொகுதிகளிலும் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.