தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேர்தல் பத்திர திட்டம் என்றால் என்ன? எதற்காக எதிர்ப்பு? - முழு விவரம்!

Electoral Bond: உச்ச நீதிமன்றம் ரத்து செய்த தேர்தல் பத்திர திட்டத்தின் முழுமையான விவரங்களையும், அதை ஏன் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது என்பதையும் இத்தொகுப்பில் காணலாம்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 12:16 PM IST

Updated : Feb 15, 2024, 1:36 PM IST

சென்னை:அரசியல் வட்டாரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் பத்திரத்திற்கு எதிரான வழக்கில், இன்று (பிப்.15) உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து தீர்ப்பு வெளியிட்டது. அப்படியாக உச்ச நீதிமன்றம் ரத்து செய்த தேர்தல் பத்திர திட்டத்தின் முழுமையான விவரங்களையும், அதை ஏன் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது என்பதையும் இத்தொகுப்பில் காணலாம்.

தேர்தல் பத்திரம்:இந்திய அரசியல் கட்சிகள், ஒருவரிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை பெற்றால், அதன் முழு விவரத்தையும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க அரசியல் சட்டம் வழிவகை செய்திருந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி செய்த மோடி தலையிலான அரசு, மத்திய பட்ஜெட்டில் இந்த சட்டத்தை திருத்தம் செய்து, தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த தேர்தல் பத்திரம் திட்டம், 2018ஆம் ஆண்டு ஜன.29ஆம் தேதி அரசாங்கத்தால் சட்டப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் தனிநபர், நிறுவனங்கள் வங்கியில் இருந்து எத்தனை தேர்தல் பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கி, தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடைகளைப் பெற்ற அரசியல் கட்சிகள், அதை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டியதில்லை. இந்த தேர்தல் பத்திரங்களை ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் பாரத ஸ்டேட் வங்கியில் மட்டுமே வாங்கிக் கொள்ள முடியும்.

அதேபோல், பொதுத் தேர்தல் காலத்தில் தேர்தல் பத்திரங்களை வாங்கிக் கொள்ள கூடுதலாக 30 நாட்கள் மத்திய அரசால் அனுமதி வழங்கப்படும். இந்திய குடிமகனாக இருக்கும் யார் வேண்டுமானாலும், இப்பத்திரத்தை வாங்கிக் கொள்ளலாம். 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 29 A பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட சட்டமன்ற அல்லது நாடாளுமன்றத் தேர்தல்களில் 1 சதவீதம் குறைவில்லாத வாக்குக்களைப் பெற்ற அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் பத்திரத்தை வழங்க முடியும்.

தேர்தல் பத்திரங்களைப் பெற்ற அரசியல் கட்சிகள், 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுகளின்றி பத்திரங்களை பணமாக மாற்றிக் கொள்ளலாம். அவ்வாறு இல்லையெனில், தேர்தல் பத்திரத்தொகை, பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பத்திரங்களை ரூ.1,000, 10,000, 1,00,000, 10,00,000, 1,00,00,000 என்று வாங்கிக் கொள்ளலாம். வாங்குவோரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்காது.

தேர்தல் பத்திர சர்ச்சை: இந்த நிலையில், இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி குறித்த விவரங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதன்படி, இத்திட்டத்தின் மூலம் கடந்த 2022 - 2023ஆம் நிதியாண்டில் நன்கொடையாக பாஜக ஆயிரத்து 294 கோடி ரூபாயும், காங்கிரஸ் 171 கோடி ரூபாயும் பெற்றுள்ளது. தேர்தல் பத்திரங்களின் மொத்த விற்பனையில், 55 சதவீத தேர்தல் பத்திரங்கள் பாஜகவிற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பத்திர திட்டத்தின் மீதான குற்றச்சாட்டுகள்:இத்திட்டத்தில் நிதி கொடுப்போரின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படுவதால், கருப்பு பண புழக்கத்தை ஊக்குவிக்கும் எனவும், இத்திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், இத்திட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு:இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் தலைமையிலான சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில், தேர்தல் பத்திரம் திட்டத்தில் எந்த ஒரு சட்டவிதிகளும் மீறப்படவில்லை என்றும், யாருடைய உரிமைகளும் மீறப்படவில்லை என மத்திய அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட நிதிகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கின் பிரதி வாதங்கள், கடந்த நவ.2ஆம் தேதி முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இந்த நிலையில், அரசியல் வட்டாரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவ்வழக்கின் தீர்ப்பு, இன்று (பிப்.15) வெளியிடப்பட்டது.

தேர்தல் பத்திர திட்டம் குறித்து நீதிபதிகள் கருத்து: இவ்வழக்கில், தேர்தல் பத்திரங்கள் கைமாறு ஆதாயங்களுக்கு வழி வகுக்கும் எனவும், பெயர் குறிப்பிடாத தேர்தல் பத்திரங்கள் திட்டம் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எதிராக உள்ளது எனவும், கட்சிகளுக்கு யார் நன்கொடை கொடுக்கிறார்கள் என்பதை மக்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும் எனவும், தனியார் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளையும், அரசாங்கத்தையும் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அபாயம் உள்ளது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தேர்தல் பத்திர திட்டம் ரத்து:இதனைத் தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை வாசித்த உச் சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திரமுறையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.

இதையும் படிங்க:தேர்தல் பத்திரமுறை ரத்து - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Last Updated : Feb 15, 2024, 1:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details