ஹைதராபாத்: தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தல் வாக்குறுதியில், சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவித்திருந்தது. அதன்படி, தெலங்கானாவில் நவம்பர் 6ஆம் தேதி முதல் நவ.30ஆம் தேதிக்குள் சாதி மற்றும் சமூக பொருளாதாரக் கணக்கெடுப்பை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, சுமார் 80 ஆயிரம் கணக்கெடுப்பாளர்கள் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று கணக்கெடுப்புக்கான தரவுகளை சேகரிக்க உள்ளார்கள். சமூகம், பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் மற்றும் சாதி தகவல்கள் ஆகியவை இந்த கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இந்த சர்வே நடத்தப்படும்? என்ன மாதிரியான தரவுகள் சேர்க்கப்படும் என்பதை விரிவாக காண்போம்.
கணக்கெடுப்பின் நோக்கம்:மாநிலத்தின் பட்டியல் சாதிகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்கான சமூக, பொருளாதார, கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அரசியல் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு தகுந்த திட்டங்களை தயாரித்து செயல்படுத்துவதே கணக்கெடுப்பின் முக்கிய நோக்கம் என்று அரசு கூறுகிறது.
56 முக்கிய கேள்விகள் - 19 துணை கேள்விகள்:கேள்வித்தாள் வடிவில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதற்கு, 56 முக்கிய கேள்விகளும், 19 துணை கேள்விகளும் சேர்த்து மொத்தம் 75 கேள்விகள் கேட்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்படும். பகுதி-1 மற்றும் பகுதி-2-ன் கீழ் மொத்தம் எட்டு பக்கங்களில் தரவுகள் நிரப்பப்படும். இந்த பகுதி-1 இல், குடும்ப உரிமையாளர் மற்றும் உறுப்பினர்களின் தனிப்பட்ட விவரங்களின் கீழ் பொதுவான விவரங்கள், கல்வி, வேலைவாய்ப்பு, நிலங்கள், சாதி இடஒதுக்கீடு பலன்கள், அரசியல் மற்றும் இடம்பெயர்வு தகவல்கள் கேட்கப்படும். குடும்ப விவரங்கள் பகுதி-B இன் கீழ் சேகரிக்கப்படுகின்றன.
நில பட்டா, ஏக்கர் விவரங்கள்:நில விவரங்களைச் சேகரிக்க, தரணி பட்டா எண் போன்ற நில விவரங்கள், குழி ஏக்கர் கணக்கு ஆகியவற்றை கணக்கெடுப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும். பாசன ஆதாரம் மற்றும் குத்தகை நிலத்தில் சாகுபடி செய்தால், சாகுபடி பரப்பு விவரம் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்படும்.
அரசியல் பின்னணி:மக்கள் பிரதிநிதியாக முன்னர் வகித்த பதவி மற்றும் பதவிக்காலம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளிடப்பட்டுள்ளன. இந்த கேள்வித்தாள் மக்கள் பிரதிநிதிகளாக பணியாற்றியவர்களுக்கு மட்டும் பொருந்தும்.
இட ஒதுக்கீடு பலன்:கல்வி, வேலைவாய்ப்பில், இடஒதுக்கீடு முறையில் பயன் பெற்றிருந்தாலும், கடந்த ஐந்தாண்டுகளில் அரசால் பயன்பெற்ற திட்டங்கள் குறித்த விவரம் பதிவு செய்யப்படும். SC, ST, BC, EWS சான்றிதழ்கள் உள்ளதா? நாடோடி அல்லது நாடோடி பழங்குடியினரின் விவரங்கள் ஆம்/ இல்லை வடிவத்தில் உள்ளிடப்படும்.