கொல்கத்தா:மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் உள்ளார். இந்த நிலையில், ராஜ்பவனில் பணிபுரியும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர், ராஜ்பவன் நிர்வாகத்திடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதன்படி, இரண்டு முறை ஆளுநரால் அழைக்கப்பட்டதாகவும், முதல் முறை துன்புறுத்தியபோது அங்கிருந்து வெளியே வந்ததாகவும், மீண்டும் இன்று ஆளுநர் அழைத்து, வேலையை நிரந்தரமாக்குவதாகக் கூறி பாலியல் ரீதியாத தன்னை துன்புறுத்தியதாகவும் அப்பெண் ஊழியர் கூறியுள்ளார்.
இதனையடுத்து, மேற்கு வங்க ராஜ்பவன், ஹரே ஸ்ட்ரீட் காவல் நிலைய எல்லைக்குள் வருவதால், அங்கு சென்று புகார் அளிக்கும்படி ராஜ்பவன் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, ஹரே ஸ்ட்ரீட் சென்ற அப்பெண் ஊழியர், இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான புகாரினை அளித்துள்ளார்.
இருப்பினும், இதுவரை கொல்கத்தா காவல்துறையினர் எதுவும் கூறவில்லை. மேலும், மக்களவைத் தேர்தலை ஒட்டி, பிரசாரத்திற்காக இன்று இரவு மேற்கு வங்க ஆளுநர் மாளிகைக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இது தொடர்பாக மேற்கு வங்க ஆளுநர் மாளிகை, சி.வி.ஆனந்த போஸ் கூறியதாக வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “உண்மை வெல்லும். கட்டமைக்கப்பட்ட கதைகளால் நான் பயப்படுவதை மறுக்கிறேன். யாரேனும் என்னை இழிவுபடுத்தி தேர்தல் ஆதாயம் பெற விரும்பினால், கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும். ஆனால், மேற்கு வங்கத்தில் ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிரான எனது போராட்டத்தை அவர்களால் தடுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை குற்றவாளி கோல்டி பிரார் சுட்டுக் கொலையா? அமெரிக்க போலீசார் கூறுவதென்ன? - Goldy Brar