டெல்லி: 18வது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றன. வாக்குப்பதிவு நடைபெற்ற 543 தொகுதிகளிலும் நாளை (ஜூன்.4) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், வரலாற்றில் முதல் முறையாக தேர்தலுக்கு பின் இந்திய தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், 2024 மக்களவை தேர்தல் வாக்குப்பதிவில் உலக சாதனை படைக்கப்பட்டு உள்ளதாகவும் ஏறத்தாழ 64 கோடியே 20 லட்சம் பேர் மக்களவை தேர்தலில் வாக்களித்து உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையர்கள் எழுந்து நின்று கைகளை தட்டி நன்றி தெரிவித்தனர்.
மக்களவை தேர்தலில் 64 கோடியே 20 லட்சம் பேர் வாக்களித்தது என்பது ஜி7 நாடுகளை காட்டிலும் ஒன்றரை மடங்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளில் உள்ள வாக்காளர்களை காட்டிலும் இரண்டரை மடங்கு அதிகம் என்றும் இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் மற்றும் பாதுகாப்பு பணியில் ஒன்றரை கோடி பேர் ஈடுபடுத்தப்பட்டதாக கூறினார்.
நாளை (ஜூன்.4) நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை பணிகளை முன்னிட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், வன்முறையே நடைபெறாத தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார். தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக நான்கரை லட்சம் புகார்கள் பெறப்பட்ட நிலையில், அதில் 99.9 சதவீத புகார்கள் தீர்த்து வைக்கப்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.