பர்கானாஸ்:நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரியின் 40 தொகுதிகள் உட்பட 22 மாநிலங்களில் மொத்தம் 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக, 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், 8 மாநிலங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளில் இறுதிக் கட்டமாக 7ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில் பீகாரில் 8 தொகுதிகள், சண்டிகரில் ஒரு தொகுதி, இமாச்சல பிரதேசத்தில் 4 தொகுதிகள், ஜார்கண்டில் 3 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 9 தொகுதிகள், பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தலா 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கண்ட 57 தொகுதிகளில் 904 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
மேற்குவங்கம்:மேற்கு வங்க மாநிலத்தில் பதற்றமான வாக்குப்பதிவு இடங்கள் அதிகம் இருப்பதால், அங்குள்ள 42 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று இறுதியாக 9 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வரும் வேளையில் தெற்கு 24 பர்கானாஸிஸ் பகுதியில் இரு பிரிவினர் இடையே வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.