சென்னை:உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் நேற்று (ஜூலை 02) ஆன்மீக கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்மீக சொற்பொழிவாளர் 'போலே பாபா' உரையாற்றினார்.
இவரின் உரையைக் கேட்க ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்து கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது, வெளியே செல்ல வழியின்றி கூட்ட நெரிசலில் சிக்கினர்.
இந்த நெரிசலில் சிக்கி நேற்று (ஜூலை 02) வரை குழந்தைகள், பெண்கள் என 116 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று (ஜூலை 03) பலி எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 28 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து தனது 'X' வலைதளப்பக்கத்தில், இச்சம்பவம் குறித்து கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். அக்கவிதை பின்வருமாறு..
உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நெரிசலில் இறந்துபோன அத்துணை உயிர்களுக்கும் அஞ்சலி செலுத்துகிறேன்
சடலங்களுக்கு மட்டுமல்ல சடங்குகளுக்கும் சேர்த்தே இரங்குகிறேன்
ஆன்மிகச் சொற்பொழிவாளரின் காலடி மண்ணைக் கவரவேண்டும் என்றுதான் ஒருவர் காலடியில் ஒருவர் செத்திருக்கிறார்கள்