பதேபூர் (உ.பி.):உத்தரப் பிரதேச மாநிலம், பதேபூர் மாவட்டத்தின் மல்வான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சௌரா கிராமத்தில் தமது பெற்றோருடன் வசித்து வரும் இளைஞர் விகாஸ் திவேதி. பாம்பு கடிக்கு ஆளான இவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 34 நாட்களில் ஆறு முறை பாம்பு கடிக்கு ஆளான திவேதி, தற்போது ஏழாவது முறையாக மீண்டும் பாம்புக்கு இலக்காகி உள்ளார்.
"ஒவ்வொரு முறை அவரை பாம்பு கடிக்கும்போதும் சிகிச்சைக்கு ஒரே மருந்து தான் தரப்படுகிறது. அதில் அவர் குணமடைந்து வீடும் திரும்பி உள்ளார். ஆனால் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் அவரை தொடர்ந்து பாம்பு கடித்து வருவது உண்மையிலேயே வியப்பாக உள்ளது" என்று விகாஸ் திவேதிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் கூறியுள்ளார்.
இதனிடையே "ஒவ்வொரு முறை தம்மை பாம்பு கடிப்பதற்கு முன் விகாஸ் அபசகுணமாக ஏதாவது உணர்வார் என்றும், அவரை பாம்பு கடித்தால் அது சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையாக தான் இருக்கும்" எனவும் அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.