லக்கிம்பூர் கேரி (உ.பி.): ரீல்ஸ் மோகத்தால் சாகச வீடியோக்களை எடுக்க, எல்லை மீறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. யாருமே எடுக்காத ரீல்ஸ் எடுத்தால் சோசியல் மீடியாவில் சீக்கிரம் ரீச்சாகலாம் என்று எண்ணி, சிலர் உயிரிழக்கவும் நேரிடுகிறது. இந்த நிலையில், தாய், தந்தையின் ரீல்ஸ் மோகத்தால் 3 வயது மகனும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், உமரியா கல்வர்ட் அருகே ஆயில் ரயில்வே கிராசிங் உள்ளது. இது கிராம பகுதி என்பதால் அந்த அளவுக்கு பரபரப்பு இருக்காது. இந்த சூழலில், இன்று காலை 11 அளவில் தம்பதி இருவர் தங்களது 3 வயது மகனுடன் ரயில்வே கிராசிங்கிற்கு வந்து ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க:காந்தகார் விமானக்கடத்தல்: பணயக்கைதியின் நேரடி அனுபவம்!
அப்போது, அந்த பக்கமாக வந்த ரயில் மூன்று பேர் மீதும் மோதியுள்ளது. இதில் அந்த சிறுவன் உட்பட மூன்று பேருமே அடிபட்டு சுருண்டி விழுந்து சம்பவத்திலேயே உயிரிழந்துள்ளனர். பின்னர் இதுகுறித்து கிராம தலைவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மூன்று பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் கவுதம் தெரிவிக்கையில், உயிரிழந்த தம்பதி சீதாபூரில் உள்ள லஹர்பூர் பகுதியில் வசித்து வந்துள்ளனர். அதில், முகமது அகமது (26), அவரது மனைவி ஆயிஷா (24), அப்துல்லா (3) என அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் இந்த தம்பதி நீண்ட காலமாக சோசியல் மீடியாவில் ரீல்ஸ் போட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில் தாய், தந்தையின் ரீல்ஸ் மோகம் குழந்தை உயிரையும் சேர்த்து பறித்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.