ஜம்மு: ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலையில் குளிர் நிலவியதால் வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. பின்னர், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீரின் முதற்கட்ட வாக்குப்பதிவில் 24 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. காஷ்மீரின் 16 தொகுதிகள் மற்றும் ஜம்முவின் 8 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் 23.27 லட்சம் வாக்காளர்கள் வாக்கினைச் செலுத்த தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 1.23 லட்சம் முதல்முறை வாக்காளர்கள், 60 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 29 ஆயிரத்து 309 மாற்றுத்திறனாளிகள் அடங்குவர்.
Female voters proudly showing their inked fingers after casting their vote.#Kulgam #DemocracyInAction" @ceo_UTJK @ECISVEEP @diprjk @AtharAamirKhan @ddnewsSrinagar @PIBSrinagar pic.twitter.com/u42NfPHhUv
— Information and PR Kulgam (@DioKulgam) September 18, 2024
இவ்வாறு நடைபெற்ற ஜம்மு காஷ்மீரின் முதற்கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பி கே போல் தெரிவித்துள்ளார். இது வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குப்பதிவு நிலவரம் என ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளார். அதேநேரம், கடந்த 2024 மக்களவைத் தேர்தலிலும் அதிகபட்ச வாக்கு சதவீதத்தை ஜம்மு காஷ்மீர் பெற்றது.
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் தந்தை - மகன் அதிகார மையம்.. ஆட்சி கண்ட மாநிலங்கள் விபரம்!
குறிப்பாக, காஷ்மீர் பகுதியைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக பஹல்காம் சட்டமன்றத் தொகுதியில் 71.26 சதவீத வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து, டி.எச்.போரா 68.45 சதவீதம், ஷோபியன் 57.78 சதவீதம், மேற்கு அனந்த்நாக் 48.73 சதவீதம், குல்காம் 62.76 சதவீதம் மற்றும் ஸ்ரீகுஃபாரா - பிஜெப்ஹெராவில் 60.33 சதவீத வாக்குகள் பதிவாகின. அதேபோல், குறைந்தபட்சமாக புல்வாமா மாவட்டத்தில் 46.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
அதேநேரம், ஜம்மு பகுதியைப் பொறுத்தவரை இந்தர்வாலில் அதிகபட்சமாக 82.16 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனைத் தொடர்ந்து பாடர்-நாக்சேனி 80.67 சதவீதம், மேற்கு தோடாவில் 75.98 சதவீதம், பதேர்வாவில் 67.18 சதவீதம், ராம்பனில் 69.6 சதவீதம் மற்றும் பானிஹலில் 71.28 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாகவும், தேர்தல் ஆணையத்தின் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கையால் அதிகபட்ச வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், ஜம்மு காஷ்மீரின் ஜனநாயகப் பங்கை இந்த வாக்கு சதவீதம் காண்பித்து உள்ளதாகவும் பி கே போல் தெரிவித்தார்.