சென்னை: பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி 5 சீசன்களாக நடைபெற்று வருகிறது. சமையல் நிகழ்ச்சி நகைச்சுவையுடன் நடத்தப்படுவதால் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் 5வது சீசனில் செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் இருவரும் நடுவர்களாக உள்ளனர்.
மேலும் இந்த சீசனில் ரக்ஷன், மணிமேகலை ஆகியோர் தொகுப்பாளராக இருந்து வந்தனர். இந்நிலையில் மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், இந்த நிகழ்ச்சியில் குக் ஆக இருக்கும் சீனியர் பெண் தொகுப்பாளர், தன்னை தொல்லை செய்வதாகவும், வேலை செய்யவிடாமல் ஒடுக்குவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், பணத்தைவிட நமக்கு சுயமரியாதை முக்கியம் என பதிவிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. சமூக வலைத்தளத்தில் பெரும் பேசு பொருளானது. மேலும், நெட்டிசன்கள் பலர் இந்த விவகாரம் குறித்து தங்களது நிலைப்பாட்டை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபல நகைச்சுவை கலைஞர் குரேஷி, தனது யூடியூப் சேனலில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் திவ்யா துரைசாமி விலகிய தினத்தில் தான் இந்த பிரச்னை நடந்தது. அன்று திவ்யா துரைசாமி விலகிய போது ப்ரியங்கா முதல் அனைத்து குக்கும் எனக்கு உதவியாக இருந்தனர் எனக் கூறினார். அதனைத் தொடர்ந்து ப்ரியங்கா, நான் திவ்யாவை பற்றி பேசலாமா என தொகுப்பாளரிடம் கேட்ட போது, மணிமேகலை அமைதியாக இருந்தார்.
பின்னர், ப்ரியங்கா பேசத் தொடங்கிய போது, மணிமேகலை திடீரென குறுக்கிட்டார். மணிமேகலை, ஷோ நடக்கும் போதே ப்ரியங்கா நீங்கள் பேச வேண்டாம், ஏற்கனவே இந்த ஷோவிற்கு நீங்கள் தான் தொகுப்பாளர் என வெளியில் பேசிக் கொள்கின்றனர். அதனால் நீங்கள் பேச வேண்டாம் என்றார். இதனால் ப்ரியங்கா அதிர்ச்சி அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த எபிசோடில் ப்ரியங்கா கடந்த வாரம் நடந்த விவகாரம் குறித்து மணிமேகலை நிகழ்ச்சியில் பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால், மணிமேகலை நிகழ்ச்சியில் அந்த விஷயம் குறித்து பேசவில்லை. அவர் செட்டிற்கு வராமல் கோபத்தில் கேரவனுக்குச் சென்றார். எனக்கு தெரிந்து மணிமேகலையிடம் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என யாரும் கூறவில்லை. அனைவருக்கும் சுயமரியாதை முக்கியம் தான்.
இதையும் படிங்க: ”இரண்டு மாத உழைப்பு வீண்”.. - 'கூலி' பட காட்சிகள் கசிந்தது குறித்து இயக்குநர் லோகேஷ் வருத்தம்! - coolie leaked video
ப்ரியங்கா நிகழ்ச்சியில் கேட்ட போது அவரை பேச வைத்திருக்க வேண்டும். நிகழ்ச்சியில் ப்ரியங்காவை பேச வேண்டாம் என கூறுவது தவறு. சாதாரண விஷயத்தை மணிமேகலை சீரியஸாக எடுத்துக் கொண்டார். ப்ரியங்காவிற்கு ஆதரவாக நான் செயல்படவில்லை. அவரை நிகழ்ச்சியில் பலமுறை கலாய்த்து பேசியுள்ளேன். அவருக்கு ஆதரவாக நான் பேச வேண்டும் என அவசியம் இல்லை” எனக் கூறியுள்ளார்.