புதுடெல்லி:நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் திமுக எம்பிக்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர்.
நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி தொடங்கியது. அதானி மீதான அமெரி்கக வழக்கு, சம்பல் வன்முறை, மணிப்பூர் கலவரம் ஆகியவை குறித்து விவாதிக்க வலியுறுத்தி கூட்டத்தொடரில் ஐந்து நாட்களாக இந்தியா கூட்டணி எம்பிக்கள் வலியுறுத்தினர். எதிர்கட்சிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. எனவே கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
எனவே ஐந்து நாட்களாக அவை அடுத்தடுத்து நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சி கூட்டணிக்கும் இடைய அவையை சுமுகமாக நடத்துவது என்று உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று அவை நடவடிக்கைகள் முழுமையாக நடைபெற்றது. ஏழாவது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வழக்கம்போல கேள்வி நேரம் நடைபெற்றது.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது திமுக எம்பி வில்சன், "நீட் கேள்வி தாள் 2024ஆம் ஆண்டு லீக் ஆனது குறித்து கேள்வி எழுப்பினார். கேள்வி தாளை லீக் செய்த நபர்கள் குறித்தும், இந்த விஷயத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறும்" அவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க:சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது...மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் நாளை பதவி ஏற்பு!
மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய திமுக எம்பி சண்முகம், "ஜவுளித்துறையில் வேலையின்றி இருப்பவர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்," எனக் கேட்டுக் கொண்டார். "வேலையின்றி தவிக்கும் அவர்களுக்கு நிதி ஈதியாக உதவும் வகையில் இஎஸ்ஐ தி்டடத்தை செயல்படுத்த வேண்டும்," என்றும் கோரிக்கை விடுத்தார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது திமுக எம்பி கனிமொழி என்விஎன் சோமு, "ஸ்விக்கி, நெட்மெட்ஸ் போன்ற விநியோக தளங்கள் மூலம் மருந்து பொருட்கள் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பத்து நிமிடத்தில் மருந்து பொருட்கள் டெலிவரி செய்யப்படும் எனக்கூறுவது நோயாளிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்தும்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மக்களவையில் ஜீரோ அவரின் போது அமேசான் பணியாளர்களின் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. குறைந்த கூலியில் பணியாற்றும் அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் நேரிட்டுள்ளதாகவும் உறுப்பினர்கள் எடுத்துக் கூறினர். இதனிடையே மக்களவையின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதானி குழுமத்துக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.