புதுதில்லி: மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த பூஜா கேத்கர், போலி சான்றிதழ்கள் கொடுத்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதாவது ஐஏஏஸ் தேர்வு செயல்பாட்டில் சலுகைகளை பெற அவர் தன்னை உடல் ஊனக் குறைப்பாடு உள்ளவர் எனக் கூறி போலி ஆவணங்களை சமர்பித்திருந்ததாகவும், ஒபிசி வகுப்பு சான்றிதழை முறைகேடாக பெற்றதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அத்துடன்,யுபிஎஸ்சி தேர்வு விதிமுறைகளுக்கு மாறாக, தன்னுடைய அடையாளத்தை மறைத்து, அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி பூஜா கேத்கர் தேர்வு எழுதியுள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இவ்வாறு அடுக்கடுக்கான புகார்களும், சர்ச்சைகளும் எழுந்த நிலையில் அவரை விதர்பா பகுதியின் வாஷிம் மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்து மாநில அரசு அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்த நிலையில், யுபிஎஸ்சி தேர்வு விதிமுறைகளை மீறியது மற்றும் போலி சான்றிதழ்கள் சமர்பித்தது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி பூஜா கேத்கருக்கு யுபிஎஸ்சி கடந்த ஜூலை 18 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீஸுக்கு ஜூலை 25 ஆம் பதில் அளித்திருந்தபோதும், முக்கியமான கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க ஏதுவாக ஆகஸ்ட் 4 ஆம் தேதி லரை பூஜா கேத்கர் அவகாசம் கோரியிருந்தார்.
ஆனால் அவருக்கு ஜுலை 30 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணி வரை யுபிஎஸ்சி அவகாசம் அளித்திருந்தது. இதுவே அவருக்கு அளிக்கப்படும் இறுதி வாய்ப்பு என்றும், ஆவணங்களை சமர்பிக்க மேற்கொண்டு காலநீட்டிப்பு அளிக்கப்படாது எனவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர் தன் தரப்பு வாதத்தை எடுத்து வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.