கஸ்கஞ்ச் :உத்தர பிரதேசம் மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டம் படியாலி - தரியாவ்கஞ்ச் சாலையில் இன்று (பிப்.24) காலை 10 மணி அளவில் பக்தர்கள் கூட்டத்துடன் டிராக்டர் ஒன்று சென்று உள்ளது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் அருகில் இருந்த குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தலைகுப்புற டிராக்டரின் டிராலி கவிழந்ததாக கூறப்படும் நிலையில், அதில் பயணித்த மக்கள் நீரில் மூழ்கினர். இதைக் கண்ட அருகில் இருந்த கிராம மக்கள் ஓடோடி வந்து நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உள்ளூர் மக்களின் உதவியுடன் நீரில் தத்தளித்துக் கொண்டு இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.
இந்த கோர விபத்தில் 8 குழந்தைகள் மற்றும் 13 பெண்கள் உள்பட 24 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 4 குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விபத்தில் காயம் அடைந்தவர்கள் ஆம்பூலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ள உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், படுகாயம் அடைந்த பக்தர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் பக்கத்தில், காஸ்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிர் இழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது.
அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்த அனைவருக்கும் முறையான இலவச சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று பதிவிட்டு உள்ளார். மேலும், இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :"புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும்" - மத்திய அரசு!