டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், இன்றைய விவாதத்தின்போது, திமுக எம்பி ஆ. ராசா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டாவிடம் கேள்வி எழுப்பினார்.
அப்போது ஆ.ராசா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதோடு சரி, மேற்கொண்டு எந்த பணிகளும் நடக்கவில்லை. மேலும், இந்த விவாதத்தில் மதுரை எய்ம்ஸ் குறித்து எதையும் குறிப்பிடவில்லை. இப்படி தமிழ்நாட்டையும், தமிழையும் நடத்துவது சரிதானா? என கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அமைச்சர் ஜேபி நட்டா, மதுரை எய்ம்ஸ் கட்டப்படுவதற்கு ஏற்பட்டுள்ள கால தாமதத்தை ஏற்றுக்கொள்கிறோம். விரைவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்கும் என்றார்.
அதேபோல, ஜார்கண்ட் மாநில பாஜக எம்பி நிஷிகாந்த் துபே ''தியோகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இருந்தாலும் வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை வசதி மற்றும் மற்றும் அவசரகால சேவைகள் எப்போது தொடங்கும்'' என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டாவிடம் கேள்வி எழுப்பினார்.
அப்போது ஜேபி நட்டா, எம்பி-யின் கவலைகள் தனக்குப் புரிகிறது என்றும், அவர் கேட்ட கேள்வி முக்கியமானது எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ஜேபி நட்டா, ''எய்ம்ஸ் பற்றிய எங்கள் பார்வை என்னவென்றால், நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்கள் தங்கள் சிகிச்சைக்காக டெல்லிக்கு வர வேண்டியதில்லை. டெல்லியில் எய்ம்ஸ் வழங்கும் சேவையை அதே பிராண்ட் பெயரில் ஆங்காங்கே உள்ள மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.