தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்...வரும் வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் வாய்ப்பு! - UNION CABINET

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் மட்டுமின்றி மாநில சட்டப்பேரவை சபாநாயகர்கள் உள்ளிட்டோரிடம் பரந்த அளவில் ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு கருதுகிறது.

ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்தவர்கள்
ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்தவர்கள் (Image credits-ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

புதுடெல்லி:மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த மசோதாவுக்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகள், மாநில சட்டப்பேரவைகள், மக்களவை ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்புக்கு இந்த மசோதா வழி வகுக்கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சீர்திருத்தத்தை நோக்கிய முன்னெடுப்பில் அரசு தீர்க்கமான உறுதியுடன் இருக்கிறது என்பதற்கு அடையாளமாக மத்திய அமைச்சரவை அது குறித்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. முன்மொழியப்பட உள்ள இந்த மசோதா முழுமையான ஆய்வுக்கும் ஆலோசனைக்கும் உட்படுத்தப்படும். இந்த விஷயத்தில் பரந்துபட்ட அளவில் அரசியல் ரீதியாக கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய பங்கெடுப்பாளர்கள் தங்களது கருத்துகள், ஆலோசனைகளை கூறுவதற்கு வசதியாக விரிவான ஆலோசனை மேற்கொள்வதற்காக இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் மட்டுமின்றி மாநில சட்டப்பேரவை சபாநாயகர்கள் உள்ளிட்டோரிடம் பரந்த அளவில் ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு கருதுகிறது.

முன்மொழியப்பட உள்ள திருத்தங்கள்: ஒரே நாடு, ஒரே தேர்தல் முயற்சி என்பது அது தொடர்பாக அமைக்கப்பட்ட உயர் மட்டக் குழுவின் பரிந்துரையின்படி உருவாக்கப்பட்டது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழி வகுக்கும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்வதற்கான முன்மொழிவுகள் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பிரிவு 82ஏவில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தம்:ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவைகளின் பதவி காலங்களின் நியமன தேதி, முடிவு தேதிகள் தொடர்பாக பிரிவு 82ஏயின் கீழ் உப பிரிவுகள் சேர்க்கப்பட உள்ளன.

பிரிவு 83(2)ல் திருத்தம்: மக்களவையின் காலம் மற்றும் கலைப்பு ஆகியவற்றை வரையறுக்க புதிய துணைப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும்.

பிரிவு 327ல் திருத்தம்:அரசியலமைப்பு சட்டத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான விதிகள் இதில் இணைக்கப்படும்.

உள்ளாட்சித் தேர்தலை பொதுத் தேர்தலுடன் நடத்த முன்மொழியப்பட்டதைத் தவிர, இந்தத் திருத்தங்களுக்கு குறைந்தபட்சம் 50 சதவீத மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை. கூடுதலாக, புதுச்சேரி, டெல்லி, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட யூனியன் பிரதேச மாநிலங்களின் சட்டப்பேரவைகள் தொடர்பாக திருத்தம் செய்வதற்கு ஒரு தனி மசோதா அறிமுகப்படுத்தப்படும். யூனியன் பிரதேச மாநிலங்களின் சட்டப் பேரவைகளின் விதிமுறைகளை மக்களவை மற்றும் மாநிலப் பேரவைகளுடன் சீரமைப்பதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.

உயர் மட்டக்குழுவின் பங்கு:ஒரே நாடு, ஒரே தேர்தல் கருத்தாக்கம் பல ஆண்டுகளாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 2023ஆம் ஆண்டு இது தொடர்பாக அமைக்கப்பட்ட உயர் மட்டக்குழு அமைக்கப்பட்ட பிறகே இது வேகம் பெற்றிருக்கிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை மக்களவை தேர்தலில் தொடங்கி, மாநில சட்டப்பேரவைகளுக்கு படிப்படியான அணுகுமுறையோடு அமல்படுத்த வேண்டும் என்று இந்த குழு பரிந்துரை செய்திருக்கிறது. முதல் கட்டத்தேர்தல் நடைபெற்ற 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கும் இந்த குழு பரிந்துரைத்திருக்கிறது.

உயர்மட்டக்குழுவின் அறிக்கை 2024 மார்ச் மாதம் சமர்பிக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள சட்டங்களில் அரசியல் சட்டத்தில் 15 திருத்தங்கள் உட்பட 18 முக்கியமான திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று குழு வலியுறுத்துகிறது. இந்த முன்மொழிவுகள் கலவையான பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. பல அரசியல் கட்சிகள் தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ன.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு பாஜக, பிஜூ ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் தேர்தல் செலவு உள்ளிட்ட வளங்களை சேமிக்க முடியும் என்றும் அரசியல் இடையூறுகள் குறையும் என்றும் இந்த கட்சிகள் கூறுகின்றன. அதே நேரத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

ABOUT THE AUTHOR

...view details