புதுடெல்லி: 2025-26ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வெள்ளிக்கிழமை இன்று (ஜன.31) துவங்குகிறது. இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் என்பதால், நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றவுள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்குப் பின்னர், மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடும் போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார நிதிநிலை ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்கிறார். அதனைத் தொடர்ந்து நாளை (பிப்.1) 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அதாவது, 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், திங்கட்கிழமை குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நடைபெறும். அதாவது, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்காக மக்களவை தற்காலிகமாக ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாட்களை ஒதுக்கியுள்ளது. அதே நேரம், மாநிலங்களவை விவாதத்திற்காக மூன்று நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பிப்ரவரி 6ஆம் தேதி மாநிலங்களவையில் நடைபெறும் விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று துவங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் 9 அமர்வுகளுடன் பிப்ரவரி 13ஆம் தேதி முடிவடைகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக நாடாளுமன்ற அலுவல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று (ஜன.30) அனைத்து கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டினார். அதில், பட்ஜெட் தொடர்பாகவும், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.