டெல்லி: 18வது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று (ஜூலை 22) தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 23) தாக்கல் செய்தார்.
அமிர்த காலத்தின் தொடக்கமாக பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்த நிலையில், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயம் ஆகியவற்றை உள்ளடக்கி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், 2024-2025 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டமான பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.