உஜ்ஜைன் :ஹோலி பண்டிகையை முன்னிட்டு மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் உள்ள உஜ்ஜைன் மகாகாலேஸ்வரர் கோயிலில் பஸ்ம ஆர்த்தி என்ற சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கோயில் கருவறைக்குள் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 14 அர்ச்சகர்கள் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கோர சம்பவத்தில், கோயில் தலைமை அர்ச்சகர் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அர்ச்சகர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 9 பேர் மோசமான காயங்களால் அவதியடைந்து வரும் நிலையில், மேல் சிகிச்சைக்காக இந்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் மற்றும் அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா, இந்தூர் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று காயமடைந்தவர்களை நலம் விசாரித்தனர்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில், தீ விபத்து குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்ததாகவும் படுகாயம் அடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க அறிவுறுத்தி உள்ளதாகவும் பதிவிட்டு உள்ளார். மேலும், தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டுவதாக பதிவிட்டு உள்ளார்.
அதேபோல் பிரதமர் மோடியும் தனது எக்ஸ் பக்கத்தில், உஜ்ஜைன் மகாகாலேஸ்வரர் கோயிலில் நடந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த பக்தர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உள்ளூர் நிர்வாகம் மாநில அரசின் மேற்பார்வையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளிலும் ஈடுபட்டுள்ளது என்று பதிவிட்டு உள்ளார்.
இது குறித்து பேசிய மாநில முதலமைச்சர் மோகன் யாதவ், படுகாயம் அடைந்தவர்களுக்கு 1 லட்ச ரூபாய் நிவாரண உதவியும், உயர்தர மருத்துவ சிகிச்சை இலவசமாகவும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். கோயில் கருவறையில் காலை 5.50 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டதாக உஜ்ஜைன் மாவட்ட ஆட்சியர் நீரஜ் குமார் சிங் தெரிவித்து உள்ளார்.
தீ விபத்துக்கான உண்மையான காரணம் சரியாக தெரியவராத நிலையில், இரண்டு வெவ்வேறு காரணிகள் கூறப்படுகின்றன. பஸ்ம ஆர்த்தியின் போது ஆரத்தி தட்டில் வர்ணங்கள் விழுந்து அதில் உள்ள ரசாயணத்தால் தீ விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் ஆரத்தி தட்டில் இருந்த சூடம் விழுந்து தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தீ விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவராத நிலையில் இது குறித்து போலீசார் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சம்பவ இடத்தில் உஜ்ஜைன் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் ஐஜி ஆய்வு மேற்கொண்ட நிலையில், மகாகாளி கோயிலில் மீண்டும் இயல்பு நிலை திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :பீகார் ஜேடியு வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! ஓபிசி, ஈபிசி சமுதாயத்தை குறிவைக்கும் நிதிஷ் குமார்! அதுக்குத்தான் சாதி வாரி கணக்கெடுப்பா? - JDU Lok Sabha Candidates List