டெல்லி:மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. அமலாக்கத்துறையின் விசாரணையை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ள இடைக்கால ஜாமீன் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட போதிலும், உச்ச நீதிமன்றம் கடந்த மே 11ஆம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
தொடர்ந்து இடைக்கால ஜாமீன் நிறைவடைந்ததை அடுத்து அதை நீடிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் அது தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லி ரோஸ் அவன்யூவில் உள்ள நீதிமன்றத்தில் ஜாமீனை நீடிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி விசாரணை நீதிமன்றம் நேற்று (ஜூன்.20) தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு ஒத்திவைத்து கால அவகாசம் கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை நிராகரித்த விசாரணை நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து இன்று (ஜூன்.21) அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. அமலாக்கத்துறையின் மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம், மறு அறிவிப்பு வரும் வரை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீனை நிறுத்தி வைக்கக் கோரி உத்தரவிட்டுள்ளது.
விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து இன்று (ஜூன்.21) அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலையாவார் என ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அவர்களது தலையில் இடியாய் வந்து இறங்கியுள்ளது. மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:செனாப் ரயில்வே பாலத்தில் சோதனை ஓட்டம் வெற்றி! உலகின் உயரமான பாலத்தில் விரைவில் ரயில் பயணம்! - Chenab Railway Bridge